Thursday, October 22, 2015

தி சாஷான்க் ரிடம்ப்ஷன்


தி சாஷான்க் ரிடம்ப்ஷன் படத்தை 2002 ம் வருடம் ஸ்டார் தொலைக்காட்சியில் பார்த்த ஞாபகம். அப்போது பார்க்கும்போது படம் நன்றாக இருப்பதாக மனதில் தோன்றியது. மொழி அவ்வளவாக புரியவில்லை. சமீபத்தில் IMDB இணையதளத்தில் சிறந்த 250 படங்களின் வரிசையில் முதலாவது இடத்தில் இருந்தது. தற்செயலாக வீடியோ டிவிடி கடையில் பார்த்தபோது இந்தப் படத்தின் தமிழ் மொழி குறுந்தகடு கிடைத்தது. 

படத்தின் மிகப்பெரிய பலமே திரைக்கதையும், உரையாடலும்தான்...

'ஆண்டி' கதாபாத்திரத்தில் நடித்துள்ள டிம் ராப்பின்ஷும், மார்கன் பிரிமேனும் அற்புதமான நடிப்பை செய்துள்ளது மனதை கவர்ந்தது. ஆண்டி தனது மனைவி வேறொருவனுடன் தகாத உறவு கொள்ளும்போது, கொலை செய்யும் நோக்கத்துடன் காரில் அமர்ந்திருக்கும்போது வேறொருவன் கொலை செய்கிறான். அதன்பிறகு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை பெறுகிறான். கொடும் சித்தரவதை நிகழும் இடமாக ஷாஷாங் சிறைச்சாலையில் அடைபடுகிறான். சிறைச்சாலை அச்சத்தை ஏற்படுத்துகிறது. கொலைக்குற்றத்தில் ஈடுபட்டு மார்கன் பிரீமேன் இவனுக்கு முன்பே சிறைச்சாலையில் தண்டனைக் கைதியாக ஆயுள் தண்டனை அனுபவிக்கிறார். இருவருக்குள்ளும் சிநேகிதம் உருவாகிறது. கொஞ்சம்கூட கவலைகொள்ளாத ஆண்டியின் நடவடிக்கைகள் மார்கனை கவருகிறது. ஒரு மாலை நேர சந்திப்பில் ஆண்டி மார்கனிடம் சிறிதான சுத்தியல் வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறான். மார்கன் அதற்கு செலவாகுமே என்று சொல்லும்போது அதற்கான பணத்தையும் கொடுக்கிறான். சுத்தியல் சிறைச்சாலைக்கே உரிய ரகசியமான முறையில் பணியாளர் ஒருவர் மூலம் ஆண்டிக்கு கிடைக்கிறது. அதன்பிறகான படத்தின் திரைக்கதை இதயத்தையே உலுக்குகிறது. 

ஒவ்வொரு நாளும் தன்னுடைய சிறைச்சாலையின் சுவரை சுத்தியலால் தட்டித் தட்டி தன்னுடைய வேலையை ஆரம்பிக்கிறான். அதன்பிறகு சிறைச்சாலையில் பல மாறுதல்களை செய்கிறான். சிறைச்சாலை நூலகத்தில் பல புதிய புத்தகங்களை வரவழைக்கிறான். தன்னுடைய வங்கி அதிகாரி என்ற பணி அனுபவத்தில் சிறை அதிகாரிகளை தன் வசப்படுத்தி, வரி ஏய்ப்பு செய்வதற்கு உதவுகிறான். இதன் மூலம் ஆண்டியின் செல்வாக்கு உயருகிறது. சிறைச்சாலை அதிகாரிகளின் பல அந்தரங்கமான விசயங்கள் இவன் வசமாகிறது. தான் செய்யாத கொலைக்குற்றம் வேறொரு கைதியின் மூலம் இன்னொருவன் செய்தான் என்று தெரியவரும்போது குற்றம் நடந்த நிகழ்வை சொல்பவனை அதிகாரிகள் சுட்டுக் கொள்கிறார்கள். இதனிடையே சிறைச்சாலையிலிருந்து தப்புவதற்குண்டான வேலைகளை ஆண்டி கச்சிதமாக செய்துகொண்டே இருக்கிறான். ஒரு பொய்யான மனிதன் என்ற பிம்பத்தை உருவாக்கி அதன் மூலம் வரி ஏய்ப்பு செய்வதன் மூலம், சிறையிலிருந்து தப்பிச் சென்ற பிறகு ஆதாரங்களுடன் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புதுறையிடம் சிக்க வைக்கிறான். ஆண்டி சிறையிலிருந்து தப்பும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. 'மர்லின் மன்றோ' வால்போஸ்டரை சிறை அறையினுள் ஒட்டி வைத்து அதன் பின்புறம் கச்சிதமாக இருபது வருடங்கள் ஓட்டை போட்டு தப்பிப்பது, சிறையின் பின்புறமுள்ள தண்ணீர்க் குழாயை உடைத்து மூணே முக்கால் கிலோ மீட்டர் தூரம் குழாயினுள்ளே பயணித்து, சிறைச்சாலையை விட்டு வெளியேறியதும் விடுதலை பெற்ற சாகாசத்துடன் மழையில் நனைவது அசாத்தியமான மனிதனின் செயல்பாடாக பிரமிக்க வைக்கிறது. முதாலாளித்துவத்தின் ஆணிவேரையே பிடுங்கி எறிவதுபோல் உள்ளது. அதன்பிறகு மார்கன் சிறையிலிருந்து விடுதலையானதும் ஆண்டியை தேடிச்சென்று அடையும் காட்சி கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. மனித வாழ்வின் உன்னதநிலைகளை இந்தப் படத்தில் பார்த்தபோது, இதயமே உறைந்துவிட்டது. இதற்கு முன்பு வில்லியம் வைலரின் "பென்ஹர்" திரைப்படத்தில் தொழு நோயாளிகள் படித்துறையில் மிச்செலா தன்னுடைய அம்மா, சகோதரியை பார்க்கும்போது இதயமே உறைந்துபோகிற அளவிற்கு உணர்ந்திருக்கிறேன். அதுபோன்று இந்தப் படத்தில் மார்கனுடனான ஆண்டியின் உரையாடல் மனதை கட்டிப்போட்டது. இந்தப் படத்தை காலதாமதமாக பார்த்தது வருத்தம்தான். இருப்பினும் இந்த வருடத்தில் பார்த்தது மனநிறைவைத் தந்தது...