Sunday, May 25, 2014

12 years a Slave - 2013 ம் ஆண்டில் ஆஸ்கர் விருது வென்ற படம்

இரண்டு நாளுக்கு முன்பு நான் எழுத்தாளர் ஆட்டோ சந்திரன் அண்ணன் அவர்களுடன் 2013 ம் ஆண்டில் மூன்று ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற திரைப்படமான 12 Years a Slave என்ற ஆங்கிலப் படத்தைப் பார்த்தோம். மனதில் ஈவு இரக்கமற்ற கல் மனது படைத்தவர்களால் மட்டும்தான் கண்ணீர் சிந்தாமல் பார்க்கமுடியும். ஒவ்வொரு காட்சிகளுமே மனசாட்சியை உலுக்கக்கூடியது. சாலமன் என்ற நீக்ரோ மனிதரால் எழுதப்பட்ட நாவலை மையமாக வைத்து, உண்மைக் கதையை படமாக்கி இருக்கிறார்கள். ஹேரியத் பீச்சர்ஸ் ஸ்டோவின் நாவலான டாம் மாமா குடில் அமெரிக்காவில் உள்நாட்டுப் போரைத் தோற்றுவித்தது. 1850 ம் ஆண்டுகளில் நடக்கும் கதைக்களம். ஆனால் அப்போது 12 Years a Slave என்ற நாவல் கவனம் பெறாதது வருத்தத்திற்குரிய விசயம்தான். இப்போது திரைப்படமாக வந்த பிறகு உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது மகிழ்ச்சிக்குரிய விஷயம்..!


அமெரிக்கா என்ற ஒரு நாடு கறுப்பின மக்கள் மீது எந்த அளவிற்கு கொடூரமானத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் என்பதை இந்த படத்தைப் பார்ப்பத்தின் மூலம் உணர முடிகிறது. ஒரு மனித சமுதாயத்தை எந்த அளவிற்கு இழிவுபடுத்தி இருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்க்கும்போது, இதயமே வெடித்துவிடும் போல் உள்ளது. கறுப்பின மக்களின் செத்துப்போன பிணங்களின் மீது தங்களுடைய நல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் அமெரிக்கர்கள் என்பதை உணர முடிகிறது. 


அமெரிக்க நாட்டின் கொலை செய்தவர்களின் பட்டியலை சொன்னால் வியப்பு மேலிடும். ஆப்ரஹாம் லிங்கனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்கள். மார்ட்டின்லூதர்கிங்கை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார்கள். சதாம் உசேனைத் தூக்கிலிட்டார்கள். லிபியாவின் மும்மர் கடாபியை கொலை செய்தார்கள். ஒசாமா பின்லாடனைக் சுட்டுக் கொன்றார்கள். சிலி நாட்டு அதிபர் அல்வேடர் சயாண்டோவை அதிபர் மாளிகையிலேயே குடும்பத்தோடு குண்டு வீசிக் கொன்றார்கள். அர்ஜென்டினா நாட்டின் சேகுவேராவைக் கொலை செய்தார்கள். ஜப்பான் நாட்டின் மீது நாசகார அணுகுண்டினை வீசி லட்சக்கணக்கான மக்களை கொன்றதோடு, ஆயிரக்கணக்கான மக்களை அனாதையாக்கினார்கள். ஈராக் நாட்டின் மீது குண்டு வீசி அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கான பேரை அனாதை யாக்கினார்கள். தென்அமெரிக்க அதிபர்கள் பதினான்கு பேரை கொலை செய்திருக்கிறார்கள். இன்னும் உலகை அதிகாரம் செய்வதற்கு கோடிக்கணக்கான மக்களை கொள்வதற்கும் தயங்க மாட்டார்கள். இப்படியாக பட்டியலை மேலும் மேலும் அடுக்கிக்கொண்டே போகலாம்..!! 


இந்த திரைப்படத்தில் வரும் காட்சிகள் மேற்சொன்ன விசயங்களை விட 
அதிபயங்கரமானவை. இரண்டு நூற்றாண்டுகள் ஆப்பிரிக்க மக்களை அடிமைகளாக வைத்திருந்து சித்ரவதை செய்திருக்கிறார்கள். வரலாற்றின் பக்கங்களில் இந்த இரத்தக் கரை படிந்த அத்தியாத்தை பக்கம் பக்கமாக உலகெங்கும் உள்ள எழுத்தாளர்களும், அறிவுஜீவிகளும் எழுதிக் கொண்டி -ருக்கிறார்கள். அமெரிக்கர்களால் ஒரு வரியைக் கூட மாற்றி எழுதச் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு உலகத்திலேயே கொடூரமானவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் முந்தைய தலைமுறை இப்படி இருந்திருக் -கிறார்கள். இப்போது உள்ள அமெரிக்கர்களையும் அப்படிச் சொல்ல முடியாது. மின்சாரத்தைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு அமெரிக்கர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ் தன்னுடைய மென்பொருளின் மூலம் உலகையே தன் வசம் கொண்டுள்ளார். அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தாரின் வலைப்பூ, முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை உருவாக்கி உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு முகவரியைத் தேடிக் கொடுத்திருக்கிறார்கள். உலகையே மாற்றி இருக்கிறார்கள். அதற்கு நாம் நூற்றாண்டுகளுக்கும் கடமைப்பட்டு இருக்கிறோம்..!! ஆட்சியாளர்கள் கொடுங்கோலர்களாக இருக்கும் பட்சத்தில் மக்கள் என்ன செய்வார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது..!!

Saturday, May 17, 2014

இந்தியாவில் பிறந்த இளைஞர் பட்டாளங்களே..!!

இந்திய தேசத்து மண்ணில்
கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இளைஞனே!!
உன்னுடைய வாழ்வின் முன்மாதிரி பில்கேட்ஸா?
உன்னுடைய கனவில் பாரக் ஒபாமா வருகிறாரா?
ஆம் என்றால் நீ இந்தியாவில் பிறந்த இளைஞன்தான்..!!


ஏனெனில் இந்தியக் குடிமகன் மட்டும்தான்
இந்திய தேசத்தை விட்டு வெளியே
செல்ல ஆசைப்படுவான்..!!

உன் அதிகபட்ச கனவு
6000 மைல்கள் தாண்டி உள்ள அமெரிக்கா
உன்னுடைய குறைந்த கனவு
2000 மைல்கள் தாண்டி உள்ள ஐரோப்பா..!!


நீ அமெரிக்கா தூதரகத்திற்கும்
ஐரோப்பிய தூதரகத்திற்கும் நடையாய்
நடந்து உன் செருப்பை மட்டும் அல்ல
அந்த ரோட்டையும் தேய்ப்பாய்..!!

கடைசியில் உனது கனவு நனவாகி
விமானத்தில் 20000 அடி உயரத்தில்
பறந்து உனது தாயை மட்டும் அல்ல..
உனது தாய்நாட்டையும் மறந்து செல்வாய்..!!
இந்தக் கவிதை நான் வரைவது
அமெரிக்கா, ஐரோப்பாவுக்குச் செல்லும்
அனைவரையும் அல்ல..!!
அந்த நாட்டிற்கு சென்றுவிட்டு
தான் பிறந்த பாரத மண்ணையே
மறந்து விடுகிறார்களே..
அந்த தவப்புதல்வர்களுக்காக..!!

பொருளீட்டுவதற்காக தேசங்கள்
கடந்து செல்லலாம்..
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
என்பது ஆயிரங்காலத்து பழமொழி..!!
திரைகடல் ஓடி ஜனனம் செய்த
மண்ணை மறந்து விடு என்பதை
எப்படி ஜீரணிக்க முடியும்..!!
திரவியம் தேடி பிறந்த மண்ணுக்காக
என்ன செய்யப் போகீறார்கள்..!!
இந்திய மண்ணில் மாளிகை கட்டி
இலட்சங்கள் மதிப்புள்ள வாகனங்கள் வாங்கி

சூரியனின் கதிர்கள் மேனியில் படமால்
நாலாதிக்கும் சுற்றுலா சென்று
நாட்களை ஆனந்தமாய்க் கழிப்பார்கள்..!!
வேறென்ன செய்வார்கள்...!
இந்த பரந்துபட்ட பழம்பெருமை வாய்ந்த
பாரத  தேசத்திற்காக..!!
ஒரு வேளை உணவின்றி செத்துமடியும்
ஏழைகள் பற்றி தேசத்தை கட்டி ஆளுகின்ற
அரசியல்வாதிகளுக்கே அக்கறையில்லாதபோது
பாவம் மெத்தப் படித்த பட்டதாரிகளுக்கு
என்ன கவலை இருக்கப் போகிறது..!!
முகநூலில் டுவிட்டரில்
புகைப்படங்களைப் பிரசுரம் செய்து
ஐயோ!! பாவம் ஏழைகள் உணவின்றித்
தவிக்கிறார்கள் என்று காவியம் எழுதுவார்கள்..!!
பாரத தேசத்தின் தலைவிதியை
தலைகீழாக மாற்றப் போகிறேன்
என்று வீரகாவியம் எழுதுவார்கள்..!!
இதோ நான் எழுதிக் கொண்டிருக்கிறேனே
வலைப்பூவில் வீரகாவியம்.. அதுபோல..!!
நான் செயல்களை செய்துவிட்டு
எழுதுகிறேன்..!!
மற்றவர்களின் படைப்புகளை
பகிர்ந்து கொள்ளாமல்
என்னுடைய செயல்களை மட்டுமே
காவியமாக வரைகிறேன்..!!

தேசம் கடந்து கடல் கடந்து பொருளீட்டச் சென்று
தான் சென்ற தேசமே பெரிதென்று வாழுகின்ற
புண்ணிய பூமி என்று வாழுகின்ற
பிறந்த பாரத மண்ணின் பெருமை மறந்த
உன்னை இந்தியத்தாயின் கண்ணில் விழுந்த
தூசி என்று ஒதுக்க முடியாது..!
நீ என் இந்தியத்தாயின் கண்ணைக் குத்திய ஊசி..!!

எங்கள் தப்புதான்
சிறுவயதில் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை
உன் சட்டையில் ஊசியால் குத்தியிருக்கக்கூடாது..!
இதயத்தில் ஆணியாய் அடித்திருக்க வேண்டும்..!!

Wednesday, May 14, 2014

செல்லுலாய்ட் - 2013 ம் ஆண்டில் இந்திய அரசின் தேசிய விருது பெற்ற மலையாளப் படம்


செல்லுலாய்ட் என்ற வாழ்க்கை வரலாறு மலையாளப் படம் பிப்ரவரி 15, 2013 ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. சிறந்த படத்திற்கான இந்திய அரசின் தேசிய விருதைப் பெற்றது. நடிகர் பிருத்திவிராஜ் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் இந்தப் படத்தின் DVD யை வாங்கிப் பார்த்தேன். இந்தப் படம் வெளிவந்தபோது பரபரப்பாக பேசப்பட்டது. திரைப்படம் வெளியானபோது  கோவையிலுள்ள கர்னாடிக் திரையரங்கில் போய் பார்க்கலாம் என்று சென்றபோது, படத்தை எடுத்து விட்டார்கள். அதனால் என்ன, இப்போது உள்ள தகவல் தொழில் நுட்பத்தில் இரண்டு நாட்களில் youtube ல் பதிவேற்றம் செய்து விடுவார்கள். பெரும்பாலான படங்களை youtube ல் இருந்து பதிவிறக்கம் செய்து பார்ப்பேன். ஆனால் செல்லுலாய்ட் திரைப்படம் 1930 ம் ஆண்டுகளில் சினிமாவை தெய்வீகமாக நினைத்து, மலையாள திரைப்பட உலகில் தான் ஒரு முன்னோடியாக இருக்க வேண்டும் என்று நினைத்த J.C.டேனியல் அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய திரைக்காவியம். அதனால் ரூ.120/- மதிப்புள்ள DVD யை வாங்கிப் பார்த்தேன். திரைக்காவியம் என் இதயத்தையே உலுக்கிவிட்டது. மலையாள திரைப்பட உலகில் சகாப்தம் படைத்த ஒரு மனிதர் J.C டேனியல்..!


கேரளா மாநிலத்தில் உள்ள வைக்கம் என்னும் ஊரில் ஈ.வெ.ராமசாமி பெரியார் அவர்கள், தீண்டாமை எனும் கொடிய சாதி வெறிக்கு எதிராக போராட்டம் நடத்தி வெற்றி வாகை சூடினார். அப்போது இருந்த பிரிட்டீஷ் காலனி  ஆதிக்கத்தில் இந்தியா முழுவதும் தீண்டாமைக் கொடுமை தலைவிரித் -தாடியது. நாடெங்கிலும் பல தலைவர்கள் தீண்டாமையை ஒழிக்கப் போராடினார்கள். இப்படிப்பட்ட ஒரு கொடுமையான சூழலில் கேரள மாநிலத்தில் ஒரு தலித் பிரிவைச் சேர்ந்த ரோசி என்ற பெண்மணியை கதாநாயகியாக டேனியல் நடிக்க வைக்கிறார்.

ஜே.சி.டேனியல் 
அகஸ்தீஸ்வரம் ஜே.சி.டேனியலின் சொந்த ஊர். பல் மருத்துவரான இவருக்கு சினிமா எடுக்கும் ஆர்வம் வருகிறது. அப்போதைய படங்களில் ஒலி அமைப்பு கிடையாது. சலனப்படங்கள்தான் எடுக்க முடியும். ஊரிலுள்ள நண்பர்களுடன் தன்னுடைய அபிலாஷைகளை சொல்லுகிறார். பொருட்செலவு அதிகமாகுமே என்று சொல்லும்போது, கடன்வாங்கி படம் எடுத்துவிடலாம் என்று நம்பிக்கையாக சொல்லுகிறார். அழகான மனைவி, குழந்தைகளுடன் சந்தோசமாக வாழும்போது, எதற்காக கடுமையாகப் போராடி படம் எடுக்க வேண்டும் என்று நண்பர்கள் சொல்லும்போது, பம்பாய் பட்டணத்தில் தாதா சாகேப் பால்கே, மதராசப் பட்டணத்தில் நடராஜ முதலியார் போன்றோர் சினிமா எடுக்கிறார்கள். நாமும் அதைப் போன்று சினிமா எடுத்து, கேரள மாநிலத்திற்கே முன்னோடியாக இருக்க வேண்டும் என்று கூறும்போது, J.C.டேனியலாக பிருத்திவிராஜ் நன்றாக உரையாடல் செய்கிறார். 


பம்பாய் பட்டணத்திற்குச் சென்று தாதா சாகேப் பால்கே அவர்களை சந்திக்கிறார். தன்னுடைய விருப்பத்தைச் சொல்லுகிறார். அவருடன் சில நாட்கள் தங்கி படம் எடுப்பதற்கான தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்கிறார். படத்தில் நடிக்க கதாநாயகியை பம்பாயிலேயே தேர்வு செய்கிறார். அந்தக் கதாநாயகியை கேராளாவிற்கு அழைத்து வந்த பின்பு, அது வேண்டும், இது வேண்டும் என்று  ஏகக்கெடுபிடி செய்கிறார். உங்களுடைய சாகவாசமே வேண்டாம் என்று அவர்களை அனுப்பிவிட்டு, அங்கேயே ஒரு தலித் குடும்பத்தைச் சேர்ந்த P.K.ரோசி என்ற பெண்ணைத் தேர்வு செய்கிறார்.


P.K.ரோஷி 
தன்னுடைய முதல் சலப்படத்திற்கு விகதகுமாரன் (The Lost Child) என்று பெயர் வைத்து, பிரித்திவிராஜ் கதாநாயகனாகவும், அவருடைய சிறுவயது மகனும் நடிக்கிறார்கள். படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்த பிறகு, திருவனந்தபுரத்திலேயே காட்சிப்படுத்த கிராமம் கிராமமாக சென்று விளம்பரம் செய்கிறார்கள். ஜமீன்தார்கள், மிராசுதாரர்கள், திவான்கள், பொதுமக்கள் என்று நூற்றுக்கணக்கான பேர் படத்தைப் பார்க்க வருகிறார்கள். அப்போது முதல் காட்சியைப் பார்க்க கதாநாயகியாக நடித்த ரோசியும் வருகிறார். மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், இந்தப் பெண்ணும் எங்களுடன் சரிசமமாகப் அமர்ந்து படம் பார்க்ககூடாது என்று ரகளை செய்கிறார்கள். பிருத்திவிராஜ் அவர்களை சமாதானப்படுத்தி சினிமாக் கொட்டகையில் அமரவைக்கிறார். கதாநாயகியிடம் ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி, நாம் அடுத்தக் காட்சியில் பார்க்கலாம் என்று சொல்லும்போது, கதாநாயகி ரோசி கண் கலங்குகிறார்..!!


ஒரு வழியாக அனைவரும் அமர்ந்து சலனப்படத்தை பார்க்கும்போது, ரோசிப் பெண் நாயர்குலப் பெண்ணாக நடித்த காட்சிகள் வருபோது சினிமா கொட்டகையில் களேபரம் ஆரம்பமாகிறது. ஜமீன்தார்கள், மிராசுதாரர்கள், நாயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் சினிமாக் கொட்டகையை அடித்து நொறுக்குகிறார்கள். கதாநாயகியாக நடித்தப் பெண்மணி அலறி அடித்து ஓடுகிறார். தான் நடித்தப் படத்தைக் கூட பார்க்க முடியவில்லையே என்று கண்ணீர் சிந்தி அழுகிறார். கதாநாயகி தன்னுடைய தந்தையாருடன் வசிக்கும் வீட்டைத் தீவைத்து கொளுத்துகிறார்கள். ஊரை விட்டே அந்தக் குடும்பம் சென்றுவிடுகிறது. திரைப்படம் பார்ப்பவர்களின் இதயத்தையே உருக்கிவிடும் காட்சிகள்..!!


அதன்பிறகு ஜே.சி.டேனியல் சோகமாக வீட்டில் அமர்ந்திருக்கும்போது, அவருடைய சிறுவயது மகன்ஆத்திரத்தில் படத்தின் பிலிம் ரோலை தீயிட்டுக் கொளுத்துகிறார். நெஞ்சை உருக்கவைக்கும் காட்சி..!! பின்னர் தன்னுடைய இயல்பான வாழ்க்கையைத் தொடக்கி டேனியல் பல் மருத்துவம் பார்க்கிறார். 
தமிழகத்தின் புகழ்பெற்ற நடிகரான பி.யூ.சின்னப்பாவை தற்செயலாக சந்திக்கிறார். J.C.டேனியல் திரும்பவும் படம் எடுப்பதற்கான ஆசையைத் தூண்டிவிடுகிறார். J.C.டேனியல் மதராசப்பட்டினம் வந்து மீண்டும் படம் எடுத்து, சொத்துக்கள் அத்தனையையும் இழக்கிறார். ஒரு சினிமா பத்திரிகையில் பணியாற்றும் எழுத்தாளர், J.C.டேனியலை சந்திக்க வரும்பொழுது தன்னுடைய சோகமான, பரிதாபகரமான முடிவைக் கூறுகிறார். ஏப்ரல் 25, 1975 அன்று ஜே.சி.டேனியல் நோய்வாய்ப்பட்டு மரணமடைகிறார்..! 

1930 ம் ஆண்டில் வெளியான படத்தில் வரும் ஒரு காட்சி ..!
2000 ம் வருடத்தில் திரைப்பட விழா கேரளாவில் நடக்கிறது. ஜே.சி.டேனியலின் புதல்வர் விழாவில் கலந்து கொண்டு தன்னுடைய தந்தையாரின் கடுமையான போராட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகிறார். தான் அந்த சிறுவயதில் உணர்ச்சிவசப்பட்டு, ஆத்திரப்பட்டு, தந்தையார் எடுத்த அந்த முதல் படத்தின் பிலிம் ரோலை தீயிலிட்டுக் கொளுத்திவிட்டேன். இதன் மூலம் கேரளா சினிமா உலகிற்கு மிகப்பெரிய வரலாற்றுப் பிழையைத் தேடிக்கொடுத்துவிட்டேன். நான் செய்த தவறுக்கு, நானே முழுப்பொறுப்பு..! அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள் என்று கண்ணீர் மல்க பேசுகிறார். இந்தக் காட்சி உணர்ச்சிகரமாக இருந்தது. 

J.C.டேனியல் 
ஆக ஒரு மாபெரும் கனவுலகவாதியான J.C.டேனியலின் வாழ்க்கை என்னுள் சோகத்தை ஏற்படுத்தவில்லை. எவரொவரும் செய்ய ஆரம்பிக்காத ஒரு விஷயத்தை, நாம் செய்ய முயலும்போது, மதி நுட்பத்துடன் செய்யும் பட்சத்தில், பலத்த எதிர்ப்புகள் இருக்கும் பட்சத்தில், வெற்றிகரமாக செயலை முடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது. இதே போன்று தமிழ்த்திரை உலகிலும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்கள் எடுக்கப்பட வேண்டும். ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் பாரதி, பெரியார் போன்றோரின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்த இயக்குநர் ஞானராஜசேகரன் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லியாக வேண்டும். இவருடைய "சீனிவாச ராமனுஜம்" வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியாகும் நாளை எதிர்நோக்கி வெகு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்..!!

ரா.செந்தில்குமார்...