Sunday, November 17, 2024

பழநி மலை முருகனின் தரிசனம்..

நீண்ட வருடங்களுக்குப் பிறகு திண்டுக்கல் மாவட்டம், பழநி ஊரில் மலைமீது கோவில் கொண்டு அருள்பாலிக்கும் தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய கடந்த வருடம்(2023) ஜனவரி மாதம் இரண்டாவது வியாழக்கிழமை அன்று சென்றபோது, மலை அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி சித்தரின் ஆசிரமத்தில் புலிப்பாணி சித்தரின் ஜீவசமாதியை தரிசனம் செய்தது. மலைமீது ஏறுகையில் அலைபேசி கொண்டு செல்வதற்கு தடை எதுவும் இல்லாமல் இருந்தது. இந்த 2024ம் வருடத்திலிருந்து அலைபேசி கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதை அறிகிறோம். மலைமீது உள்ள படிக்கட்டு வழியாக நடந்து செல்லும்போது மத்தியில் இடும்பன் சுவாமியை தரிசனம் செய்தது. பழநி முருகனை தரிசனம் செய்து பத்து வருடங்கள் ஆகியிருந்த ஞாபகம் வந்தது. இப்போதைய காலகட்டத்தில் ஆன்மீகம் ரத்தமும், சதையுமாக உயிருடன் கலந்துவிட்டதால் பரமேஸ்வரன், மஹாவிஷ்ணு, முருகபெருமான், பிள்ளையார் இன்னும் பிற தெய்வங்களை தரிசிப்பது ஐம்பூதங்களின் அனுகிரஹத்தால் காலமும், நேரமும் அமைந்து எளிமையாக உள்ளது. மலைமீது உள்ள படிக்கட்டுகளில் நடந்து சென்று கோவிலை அடைந்து பத்து ரூபாய் டோக்கன் வாங்கி பதினைந்து நிமிடத்தில் தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்கையில் பரவசமான அனுபவத்தை உணர்ந்தது.

தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்த பின்பு அருகிலுள்ள சந்நிதியில் போகர் சித்தருடைய ஜீவசமாதியில் போகர் வழிபாடு செய்த மரகத லிங்கமுடன், புவனேஸ்வரி தாயினை தரிசனம் செய்தது. 1988ஆம் வருடம், ஜூன் 27 நாளன்று.. போகர் சித்தரின் ஜீவசமாதிக்கு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடந்த கல்வெட்டினை அருகிலே பார்த்தது. பழனி ஊரிலுள்ள நகராட்சி நிர்வாகம் மோசமான சுகாதார கட்டமைப்பினை கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் குப்பையும், சேறும் சகதியுமாக இருந்ததை பார்க்க கஷ்டமாக இருந்தது. மதுரை மாநகரத்திலும் இதேபோன்று சுகாதார கட்டமைப்பு படுமோசமாக ஆகியுள்ளதை ஒப்பீடு செய்து பார்க்கும்போது எந்த மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. 

No comments:

Post a Comment