Tuesday, September 8, 2015

நாகர்களின் ரகசியம்

எழுத்தாளர் அமிஷின் சிவா முத்தொகுதியின் இரண்டாவது நூலான 'நாகர்களின் ரகசியம்' இனிமையானதொரு வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்தியது.

4000 வருடங்களுக்கு முன்பு மனிதனாக வாழ்ந்த ஒரு மனிதர், இன்று கடவுளாக வணங்கப்படுகிறார். அந்த மனிதரின் வாழ்க்கைப் பயணித்தினூடே நிகழும் சம்பவங்கள் நம்மை திகைக்க வைக்கிறது. பிரகஸ்பதியுடனான நட்பு, சதியுடனான திருமண வாழ்க்கை, சதியின் தந்தையார் செய்யும் மாயவலை சூழ்ச்சிகள் என்று கதை செல்லும் விதமே வியப்பில் ஆழ்த்துகிறது. நாகர்களையும் அவர்களின் அங்ககீனமான தோற்றத்தையும் குறிப்பிட்டு அவர்களின் மீதான வெறுப்பை உண்டாக்கும் பட்சத்தில், கிராமத்தில் புகுந்த புலிகளைக்  கொன்று மக்களை காப்பாற்றச் சென்ற இளவரசி சதியை 'நாகா' உயிரை பணயம் வைத்து காப்பாற்றும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

அதன்பிறகான உரையாடலில் 'நாகா' சதியின் கருவில் பிறந்த குழந்தை என்று தெரியவரும்போது, நம்மை ஆச்சரியத்தில் மிதக்கவிடுகிறது. அதன் பிறகு அவிழும் ரகசியத்தின் முடிச்சுகள் புத்தகத்தை கீழே வைக்க முடியாத அளவு செய்கிறது. சிவபெருமானின் புராண வரலாற்றை புதிய கோணத்தில் எழுதி நம்மை ஆச்சரியத்தில் மிதக்க விடுகிறார் எழுத்தாளர் அமிஷ்.

'நாகா' பற்றிய ரகசியத்தை சிவனிடம் சதி சொல்லும் காட்சிகள், நாகா -வினுடைய கரங்களில் ஒருவித சின்னத்தைப் பார்த்தவுடன் அடையும் பதற்றம், அதன் பிறகான சிவனின் கோபம் என்று அடுத்த கட்டமான கதைக்களம் செல்லும். பிரகஸ்பதியின் ரகசியத்தை தேடி கங்கை நதி தீரத்தில் கப்பலில் செல்லும்போது சிவனும் அவனுடைய பரிவாரங்களும் மலைக் காடுகளில் 'பரசுராமருடன்' சண்டையிடும் காட்சிகள் வாசிப்பில் புதியதொரு அனுபவம். 'சோமரச பானம்' புதினத்தில் ஏற்படுத்தும் பிரமிப்பு, சதியின் குழந்தை பிறக்கும்வரை பரவசத்தில் ஆழ்த்துகிறது.

சிவனின் குழந்தை ஏதைச்சையாக கோயிலுக்குள் விளையாடும்போது, சிங்கங்களின் தாக்குதலிருந்து 'நாகா' தன்னுடைய உயிரைப் பணையம் வைத்து மீட்கும் காட்சி அற்புதம். அதன்பிறகு நாகாவின் மீது சிவனின் பரிவு கதையின் நெருடல். உணர்ச்சிமயமான எண்ணங்களை வெளிப்படுத்திய வண்ணம் சிவன் இருப்பார்.

புதினத்தில் மனுதர்மத்தை உருவாக்கிய 'மனு' தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த நிகழ்வு யுகத்தின் பயணம். சிவபக்தனாகிய எனக்கு 'மெலுஹாவின் அமரர்கள்', 'நாகர்களின் ரகசியம்' புதியதொரு வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்தியது. மூன்றாவது தொகுதியான 'வாயுபுத்ரா'வின் தமிழ் பதிப்பு இந்த செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது!

குமணன்

கொங்கு மண்டலத்தின் முதிரம் என்னும் ஊரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவன் குமணன். (இன்றைய பழனி மலை வட்டம் அருகே உள்ள குதிரை மலை). இல்லை என்று வருவோர்க்கு எல்லாமும் கொடுத்த வள்ளல்.

அண்ணன், தான தருமம் செய்து நற்பெயர் வாங்கியது குமணனின் தம்பி
இளங்ககுமணனுக்குப் பிடிக்கவில்லை. பொறாமை நெஞ்சில் தீயாகத் தகிக்க, அண்ணணனைக் காட்டிற்கு விரட்டி விட்டு நாட்டைப் பிடுத்துக் கொண்டான். காட்டில் குமணன் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தான். புலவர்கள் எல்லாரும்
ஈதல் யாருமின்றி மிகவும் வறுமையில் வாடினர்.

பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் வறுமையைத் தாங்க முடியமால் காட்டில் குமணனைத் தேடி அலைந்தார்.

குமணனும் துன்பத்தில்தானே காட்டில் திரிகிறான். அவனால் புலவருக்கு என்ன தரமுடியும்? இருந்தாலும் தன்னைப் பாடிய புலவரை வெறுங்கையுடன் அனுப்ப மனமின்றித் தனது வாளைக் கொடுத்து, தனது தலையைக் கொய்து கொண்டுபோய் இளங்குமணனிடம் கொடுத்தால் பரிசு தருவான், வாங்கி பசியாறுங்கள் என்கிறான் குமணன்.

ஆனால் புலவர் குமணனின் வாளை மட்டும் வாங்கிக்கொண்டு இளங்குமணனிடம் 
கொண்டு போய்க் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பின் இரு குமணன்களும் என்னவானார்கள் என்று தெரியவில்லை.

நாடகம் ஒன்றில் மட்டும்,

குமணனிடம் வாளை வாங்கிய புலவர், வாழை மரத்தின் அடிவேரில் தலைபோல் செய்துகொண்டு போய்க் காட்டியதாகவும், அது கண்டு இளங்குமணன் துணுக்குற்று மனம் திருந்தி அழுததாகவும் பிறகு புலவர் உண்மையை உரைக்கக் காட்டில் திரிந்த குமணனை மீண்டும் அழைத்து வந்து நாட்டுக்கு அரசனாக்கினான் என்றும் கூறுகிறது.

ஆதன் ஓரி

நெடுமான் அஞ்சியின் நண்பனாக விளங்கியவன் ஆதன் ஓரி. இவனும் கடையேழு வள்ளல்களில் ஒருவன். ஓரி என்னும் குதிரை மீது பயணம் போனதால் ஓரி என்றே அழைக்கப்பட்டான். யானைகளைப் புலவர்களுக்குப் பரிசாக வழங்கியவன். புலவர்கள் அந்த யானைகளை விற்றுப் பொருள் பெற்றார்கள். வேட்டையாடக் காட்டு வழியே சென்றபோது பாட்டுப் பாடிப் பரிசில் பெரும் பாணர் ஒருவர் காட்டில் இவனைப் பார்த்ததும் யாழ் எடுத்து இசைக்க,அதை கேட்ட ஓரி தன் மேனியில் அணிந்திருந்த அணிகலன்களை அப்பாணருக்கு கொடுத்தான்.

சேரனுடன் கூட்டு சேர்ந்து அதியமானைக் கொன்ற திருமுடிக்காரி, ஆதன் ஓரியை முதலில் கொன்று விட்டுத்தான் அதியமானிடம் சண்டைக்குப் போனான். புலவர்களுக்குப் பொன், பொருள், தேர், யானைகளைப் பரிசாகக் கொடுத்தவன். 
காரி மீது அன்பு கொண்ட கபிலர் என்னும் புலவர் ஒரியைப் பழித்துத் தூற்றினார்.

ஆய் அண்டிரன்

வேள் ஆய், பொதிகை மலைத் தலைவன். இம்மலையை அடுத்த ஆய்குடி இவனது தலைமை ஊர்.

ஆய் நாடு யானைக் கூட்டங்கள் நிரம்பிய நாடு. பரிசு வேண்டி வந்தோர்க்கு யானைகளைக் கொடுத்து மகிழ்ந்தவன். ஒரு முறை காட்டிற்குச் சென்றபோது நீலநாகம் ஒன்று ஒரு ஆடையினை விட்டுச் சென்றதாகவும், அதனை ஆய் எடுத்து வந்து தான் வழிபடும் சிவபெருமானுக்குச் சாத்தியதாகவும் கூறுகின்றனர்.

ஆய் அண்டிரன் தன்னைப் பகைத்த கொங்கரை எதிர்த்துப் போரிட்டான். தோல்வியுற்ற கொங்கர், வேல் முனையை மாற்றி எறிந்து விட்டு போர்களத்தை
விட்டு ஓட்டம் பிடித்தனர்.

தன்னிடமிருந்த எல்லாப் பொருட்களையும் புலவர்களுக்கும், இரவலர்களுக்கும் 
ஆய் கொடுத்துவிட்டதால் அவனிடம் வறுமை குடி கொண்டது. நாடும் அழகு குன்றியது.கொடுக்க ஒன்றுமில்லையே என்று எண்ணிய ஆய் மனம் வருந்த உடல் பாதித்து... ஒரு நாள் இறந்தே போனான்.

பேகன்

பொதினியைத் (பழனி) தலைநகராகக் கொண்டு ஆண்டான் பேகன் என்ற மன்னன். காட்டு வழிப்பாதையில் மழைக் காலத்தில் ஒருநாள் பயணம் செய்தான் பேகன். மயில் ஒன்று மேகத்தைக் கண்டு களிப்புற்று நடனமாடிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட பேகன் மயில் குளிருக்கு நடுங்குவதாக எண்ணி தான் போர்த்தியிருந்த விலையுயர்ந்த பட்டாடையை அம்மயிலுக்குப் போர்த்தி விட்டு அரண்மனைக்கு மகிழ்வுடன் நடந்தான்.

அக்கால மன்னர்கள் கொடைப்பண்பு மிக்கவர்களாக இருந்தார்கள் என்பதற்கு இந்த கதை ஒரு சரித்திர சான்று.

அதியமான் நெடுமான் அஞ்சி

சேர அரசர்களுக்கு முன் கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்த சிற்றரசர்களில் அதியமான் அரசர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். நாம், பாடங்களில் 
ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்தவன் அதியமான் என்று படித்திருப்போம். அதியமான் என்பது பரம்பரைப் பெயர். அதியமான் நெடுமான் அஞ்சிதான் ஔவைக்கு கனி கொடுத்தவன். நெடுமான் அஞ்சியின் தந்தை அதியமான் நெடுமிடல் அஞ்சி. பொகுட்டெழினி, நெடுமான் அஞ்சியின் மனைவி நாகையார் சிறந்த புலவர்.


நெடுமான் அஞ்சி தகடூரை(தருமபுரி) தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். நெடுமான் தந்தை நெடுமிடல்மீது சேரன் நார்முடிசேரல் போர் தொடுத்தான். அவனைக் கொல்லி மலையில் எதிர்த்துப் போர் புரிந்த நெடுமிடல் போரில் தோற்றுப்போய் தனது நண்பனான பாண்டிய அரசன் பசும்பூண் பாண்டியனிடம் போய் படைத்தலைவனாகச் சேர்ந்து விட்டான்.

துளு நாட்டு மன்னன் நன்னன் மீது பசும்பூண் பாண்டியன் போர் தொடுக்க, அவனது சேனைக்குத் தளபதியாகச் சென்றான் நெடுமிடல். வாகைப் பரந்தலை என்னும் இடத்தில் நன்னனின் படைத்தலைவன் மிஞிலியால் நெடுமிடல் கொல்லப்பட்டான்.

அதன் பிறகு அவனது மகன் அதியமான் நெடுமான் அஞ்சி தகடூருக்குத் தலைவனான். நெடுமான் அஞ்சி அரசனாக இருந்தபொழுது ஒரு முறை 
வேட்டையாடச் சேலத்தை அடுத்த கஞ்ச மலைக்குச் சென்றான். அங்கு உயர்ந்த பாறைப் பிளவின் உச்சியில் இருந்த நெல்லி மரத்தில் கனி ஒன்றிருக்க அதைப் பறித்து வந்தான்.

அதை உண்பவர்கள் நீண்ட ஆயுளும், உறுதியான உடல் வலிமையையும் பெறுவார்கள் என்று அறிந்த அதியமான் அக்கனியைத் தான் உண்ணாது, தன் அமைச்சரவையில் அவைப்புலவராக இருந்த ஔவைக்கு,அக்கனியைக் கொண்டு வந்து கொடுத்து உண்ணச் செய்தான். ஔவை உண்டால் தமிழ் வாழும் என்று கருதிய தன்னலமற்ற அரசன் அஞ்சி.

அவ்வையார் அக்கனியை உண்ட பிறகே அதன் பயன் பற்றிக் கூறினான். மன்னனின் சுயநலமற்ற பண்பை எண்ணிய ஔவை அரசனை மேலும் புகழ்ந்து பாடல் எழுதினார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நெடுமான் அஞ்சி மீது போர் தொடுக்கத் திட்டமிட்டான் தொண்டைமான் இளந்திரையன். அஞ்சிக்கோ அப்போது போர் புரியும் எண்ணம் சிறிதும் இல்லை.

அவனது மனவோட்டத்தைப் புரிந்து கொண்ட ஔவை இளந்திரையனிடம் தூது போனார்.

அதியமானின் மீது பொறாமை கொண்ட இன்னொரு அரசன் பெயர் திருமுடிக் காரி. காரியை நெடுமான் அஞ்சி போரில் தோற்கடித்து விடுகிறான். இதனால் வஞ்சம் தீர்க்க சேரமன்னன் பெருஞ்ச்சேரல் இரும்பொறையுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு அதியமானை எதிர்க்கிறான் காரி. அதியமான் மார்பில் அம்பு பட்டு காயம் காரணமாய் இறந்து விட்டான்.

சேரன் வென்ற அந்த இடம்தான் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலை.

தன் தந்தைக்கு உதவியாகக் குதிரை மலைப் பகுதியை ஆட்சி செய்து வந்த பொகுட்டெழினி, தந்தையைப் பகை சூழ்ந்திருப்பதை அறிந்து படையுடன் வந்து போரில் வீரமரணம் அடைந்து விட்டான்.

நாட்டுக்காக உயிர் நீத்தனர் நம் முன்னோர். வள்ளல்களில் ஒருவனாகத் திகழ்ந்த அதியமானின் வாழ்க்கை வஞ்சகர்களால் முடிந்தது.