Tuesday, September 8, 2015

அதியமான் நெடுமான் அஞ்சி

சேர அரசர்களுக்கு முன் கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்த சிற்றரசர்களில் அதியமான் அரசர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். நாம், பாடங்களில் 
ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்தவன் அதியமான் என்று படித்திருப்போம். அதியமான் என்பது பரம்பரைப் பெயர். அதியமான் நெடுமான் அஞ்சிதான் ஔவைக்கு கனி கொடுத்தவன். நெடுமான் அஞ்சியின் தந்தை அதியமான் நெடுமிடல் அஞ்சி. பொகுட்டெழினி, நெடுமான் அஞ்சியின் மனைவி நாகையார் சிறந்த புலவர்.


நெடுமான் அஞ்சி தகடூரை(தருமபுரி) தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். நெடுமான் தந்தை நெடுமிடல்மீது சேரன் நார்முடிசேரல் போர் தொடுத்தான். அவனைக் கொல்லி மலையில் எதிர்த்துப் போர் புரிந்த நெடுமிடல் போரில் தோற்றுப்போய் தனது நண்பனான பாண்டிய அரசன் பசும்பூண் பாண்டியனிடம் போய் படைத்தலைவனாகச் சேர்ந்து விட்டான்.

துளு நாட்டு மன்னன் நன்னன் மீது பசும்பூண் பாண்டியன் போர் தொடுக்க, அவனது சேனைக்குத் தளபதியாகச் சென்றான் நெடுமிடல். வாகைப் பரந்தலை என்னும் இடத்தில் நன்னனின் படைத்தலைவன் மிஞிலியால் நெடுமிடல் கொல்லப்பட்டான்.

அதன் பிறகு அவனது மகன் அதியமான் நெடுமான் அஞ்சி தகடூருக்குத் தலைவனான். நெடுமான் அஞ்சி அரசனாக இருந்தபொழுது ஒரு முறை 
வேட்டையாடச் சேலத்தை அடுத்த கஞ்ச மலைக்குச் சென்றான். அங்கு உயர்ந்த பாறைப் பிளவின் உச்சியில் இருந்த நெல்லி மரத்தில் கனி ஒன்றிருக்க அதைப் பறித்து வந்தான்.

அதை உண்பவர்கள் நீண்ட ஆயுளும், உறுதியான உடல் வலிமையையும் பெறுவார்கள் என்று அறிந்த அதியமான் அக்கனியைத் தான் உண்ணாது, தன் அமைச்சரவையில் அவைப்புலவராக இருந்த ஔவைக்கு,அக்கனியைக் கொண்டு வந்து கொடுத்து உண்ணச் செய்தான். ஔவை உண்டால் தமிழ் வாழும் என்று கருதிய தன்னலமற்ற அரசன் அஞ்சி.

அவ்வையார் அக்கனியை உண்ட பிறகே அதன் பயன் பற்றிக் கூறினான். மன்னனின் சுயநலமற்ற பண்பை எண்ணிய ஔவை அரசனை மேலும் புகழ்ந்து பாடல் எழுதினார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நெடுமான் அஞ்சி மீது போர் தொடுக்கத் திட்டமிட்டான் தொண்டைமான் இளந்திரையன். அஞ்சிக்கோ அப்போது போர் புரியும் எண்ணம் சிறிதும் இல்லை.

அவனது மனவோட்டத்தைப் புரிந்து கொண்ட ஔவை இளந்திரையனிடம் தூது போனார்.

அதியமானின் மீது பொறாமை கொண்ட இன்னொரு அரசன் பெயர் திருமுடிக் காரி. காரியை நெடுமான் அஞ்சி போரில் தோற்கடித்து விடுகிறான். இதனால் வஞ்சம் தீர்க்க சேரமன்னன் பெருஞ்ச்சேரல் இரும்பொறையுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு அதியமானை எதிர்க்கிறான் காரி. அதியமான் மார்பில் அம்பு பட்டு காயம் காரணமாய் இறந்து விட்டான்.

சேரன் வென்ற அந்த இடம்தான் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலை.

தன் தந்தைக்கு உதவியாகக் குதிரை மலைப் பகுதியை ஆட்சி செய்து வந்த பொகுட்டெழினி, தந்தையைப் பகை சூழ்ந்திருப்பதை அறிந்து படையுடன் வந்து போரில் வீரமரணம் அடைந்து விட்டான்.

நாட்டுக்காக உயிர் நீத்தனர் நம் முன்னோர். வள்ளல்களில் ஒருவனாகத் திகழ்ந்த அதியமானின் வாழ்க்கை வஞ்சகர்களால் முடிந்தது.

No comments:

Post a Comment