Saturday, August 8, 2015

மெலுஹாவின் அமரர்கள்

இரண்டு வருடங்களுக்கு முன்பு கோவையிலுள்ள விஜயா பதிப்பகத்திற்கு புத்தகம் வாங்கச் சென்றபோது எதேச்சையாக அறிமுக  எழுத்தாளர் அமீஷ் எழுதிய  'மெலுகாவின் அமரர்கள்' புத்தகத்தை பார்த்தேன். ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையில் சாதனை படைத்திருப்பதாக நூலில் விளம்பரம் இருந்தது. எழுத்தாளர் சசிதாரூர் அவர்களும், மனதை கட்டிப் போடும் எழுத்து நடை என்று பாராட்டு தெரிவித்திருந்தார். சிவபெருமான் குறித்து அற்புதமான நாவல் என்று ஆங்கில இலக்கிய நண்பர்கள் சொன்னார்கள். ஆங்கிலத்தில் மாபெரும் வெற்றிபெற்று தற்போது தமிழிலும் மொழிபெயர்ப்பாகி விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது என்று சில நண்பர்கள் சொன்னார்கள். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் வாங்கிப் படித்தேன். வித்தியாசமான கோணத்தில் அமீஷின் எழுத்துநடை மனதை கொள்ளை கொண்டது. சிவபெருமான் குறித்த புராணக் கதைகளை பல வருடங்கள் ஆழ்ந்து படித்துள்ளார். இப்படியொரு மனிதன் (சிவன்) பாரத தேசத்தில் வாழ்ந்திருக்கிறாரா என்று எண்ணிப் பார்க்கும்போது வியப்பாக உள்ளது!

சிவன் சதி இருவருக்கும் நடக்கும் காதல் நிகழ்வுகள், மெலுஹா மக்களுக்காக சிவன் மேற்கொள்ளும் சாகசப் பயணங்கள், ஸ்வத்வீபத்தை அடைந்தவுடன் நீலகண்டர் என்று அழைக்கப்படுவது, நீலக் கழுத்துள்ள சிவன் குறித்து மக்களிடையே நிலவும் நம்பிக்கை, நாகர்களுடன் சிவன் போரிடும் சண்டைக் காட்சிகள் என்று மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. கடந்த பல வருடங்களாகவே சிவபெருமான் மீது மிகுந்த பக்தி உண்டு. ஓம் நமச்சிவாய மந்திரத்தை உச்சரிக்காத நாளே இல்லை என்று சொல்லலாம். இந்த நூலை படித்து முடித்தபோது ராஜமவுலி இயக்கத்தில் "பாகுபலி" சரித்திரத் திரைப்படம் வெளியானது. மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தில் இடம்பெறும் போர் காட்சியில் திரிசூல வியூகம் முறை பின்பற்றப்படும். மெலுஹாவின் அமரர்கள் கதையிலும் இந்த போர் காட்சி முறை விவரணையாக இருக்கும். ஒரு வேளை ராஜமவுலி இந்த நூலை படித்திருக்கலாம். மூன்று பாகங்கள் கொண்ட இந்த படைப்பில் தற்போது இரண்டாவது பாகமான "நாகர்களின் ரகசியம்" படித்துக் கொண்டிருக்கிறேன்..

Wednesday, June 3, 2015

தொழில்நுட்ப யுகத்தில் முகநூலின் பயன்பாடு - 15.05.14

கோவை மாநகரில் அமரர் பாலதண்டாயுதம் அவர்களின் நினைவு நாளையொட்டி மச்சக்காளிபாளையத்தில் நடைபெற்ற மாநாட்டில் முகநூல் குறித்து ஆற்றிய உரை..! 

Thursday, January 15, 2015

தை திருநாள் வாழ்த்துக்கள்!


தை திருநாள், மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள் என்று ஒவ்வொரு வருடமும் கிராமத்திலுள்ள உழவர்கள் கொண்டாடி மகிழும் நாள்! இந்த வருடம் வேளாண்மை செய்வதற்கு பருவ மழை நன்றாக பெய்ததால், உழவர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்தது. நகரத்திலுள்ளவர்கள் இயன்றவரை அருகிலுள்ள கிராமத்து விவசாயப் பெருமக்களுடன் தை திருநாளை கொண்டாடி மகிழுங்கள். இந்த மகிழ்ச்சியான திருநாளில் ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபடலாம். சினிமா அரங்கத்திற்குச் சென்று நம்முடைய நேரத்தை வீணடிக்க வேண்டாம். இந்த இனிய திருநாளில் மது அருந்துவதை முற்றிலும் தவிர்ப்போம். அனைவருக்கும் 2015 ம் ஆண்டின் தை திருநாள் வாழ்த்துக்கள்..! 

Friday, January 2, 2015

மலைவாழ் பழங்குடிகள் - தோடர் இன மக்கள்

1913 ம் ஆண்டுகளில் திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டராக பதவி வகித்த 
ஜே.சார்டஸ் மொலோனி அவர்கள், நீலகிரி மலைபிரதேசத்திற்கு சென்ற போது, தோடர் இன மக்களை புகைப்படம் எடுத்துள்ளார். 1925 ம் ஆண்டுகளில் எழுதிய "A Book Of South India" என்ற புத்தகத்தில் தோடர் இன மக்களைப் பற்றிய வாழ்வியல் முறைகளை பதிவு செய்துள்ளார். 1923 ம் ஆண்டில் மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்று, இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுவிட்டார். தன்னுடைய நாட்டிற்கு சென்றபிறகு தென்னிந்தியாவை பற்றிய அற்புதமான நூலை எழுதி வெளியிடுகிறார்.


பிரிட்டீஷ் ஆட்சி கால இந்தியாவில் எண்ணற்ற ஆங்கிலேய அதிகாரிகள் மலை வாழ் பழங்குடி மக்களைப் பற்றிய செய்திகளையும், வரலாறுகளையும் எழுதியுள்ளனர். இவர்களில் மொலோனி அவர்கள் குறிப்பிடத்தக்கவர்.தோடர், படுகர், இருளர் என்று எண்ணற்ற மக்கள் நீலகிரி மலைத்தொடர்களில் வசிக்கி றார்கள். பழங்குடி மக்களின் வரலாறு நீண்ட நெடிய வருடங்கள் கொண்டது. ஆங்கிலேயர்கள் நீலகிரி மலைத்தொடர்களில் குடியிருப்புகளை ஏற்படுத்திய பிறகே, பழங்குடி மக்கள் வெளியுலகிற்கு தெரிய ஆரம்பித்தார்கள்.


உலகிலேயே மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அதிகமான பல்லுயிரிய வளம் காணப்படுகிறது. கானுயிர்கள், விலங்கினங்கள், அரிய மூலிகை வகைகள், அரிய மரங்கள் என்று எண்ணற்ற பல்லுயிரியம் நிறைந்து காணப்படக் கூடியது. பழங்குடி மக்கள் தேன் எடுத்தல், மான்கள், பன்றிகளை வேட்டை யாடி, தங்களுடைய உணவுத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்கிறார்கள்.

1920 ம் ஆண்டுகள் வரைக்கும் கல்வியறிவு ஒரு சதவிகிதம்கூட இல்லாமல் இருந்தார்கள். அதன்பிறகு படிப்படியாக அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிக ளால், பள்ளிக்கூடங்களில் தங்களுடைய குழந்தைகளை படிப்பதற்கு அனுப்பி னார்கள். இன்றைய தினங்களில் நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் அளவிற்கு கல்வியறிவு பெற்றவர்களாக ஆகியுள்ளனர்.


டாக்டர்.பிலோ இருதயநாத் அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் 35 வருடங்க -ளுக்கும் மேல், பழங்குடி மக்களைப் பற்றி ஆய்வு செய்தவர். இவர் எழுதிய "கொங்கு மலைவாசிகள்" என்ற புத்தகம் சிறப்புக்குரியது. மேலும் பல நூல்களை எழுதியுள்ளார். சுற்றுச்சூழல் ஆர்வலர் தியோடர் பாஸ்கரன் அவர்கள், மேற்குதொடர்ச்சி மலைகளின் பல்லுயிரியத்தைப் பற்றி பல வருடங்களாக நாளிதழ்களில் எழுதியுள்ளார்.

இவர் எழுதிய கட்டுரைகளை, 'இன்னும் பிறக்காத தலை முறைக்காக', தாமரை  பூத்த தடாகம் என்று இரண்டு புத்தகங்களில் தொகுத்து உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த நூல்களில் மலை வாழ் மக்களைப் பற்றிய செய்தி களையும் குறிப்பிட்டுள்ளார்.

Saturday, December 13, 2014

முகநூல் பதிவு - 3

ஹாலிவுட் இயக்குநர் ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் வெளிவந்துள்ள "எக்சோடஸ்" திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஹீப்ரு மக்களின் விடுதலை நாயகனாக "மோஸே" வின் வீரம் மெய்சிலிர்க்க வைக்கிறது. "டென் கமாண்ட்ஸ்மெண்ட்ஸ்" திரைக் காவியத்தின் மறு உருவாக்கம்தான் எக்சோடஸ். டென்கமாண்ட்ஸ்மெண்ட்ஸில் மோசே ஒரு மென்மையான மனிதராக காட்டியிருப்பார்கள். இந்த படத்தில் தலைகீழாக மோசேவின் வீரம்! வரலாற்றில் புராண காவியங்கள் மனிதர்களிடம் ஏற்படுத்தும் ஈர்ப்பு அலாதியானது.இந்தப் படத்தில் ரிட்லி ஸ்காட் தன்னுடைய முத்திரையை பதித்திருக்கிறார். "கிளாடியேட்டர்" என்ற மகத்தான திரைக்காவியத்தை உலகிற்கு அளித்தவர் அல்லவா! அவ்வளவு எளிதில் சோடை போவாரா. இலக்கியத்தை, வரலாற்றை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பார்க்கும் வகையில் பைபிளின் காவியத்தை படைத்த இயக்குநருக்கு வாழ்த்துக்கள்..!

வலைப்பூ வாசகர்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்!!

என்னுடைய வலைப்பூ தொகுப்பு முழுவதையும் பார்வையிட்ட (10,00,000) 
பத்து லட்சம் வாசகப் பெருமக்களுக்கு என்னுடைய இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...! வலைப்பூ வாசகர்களாகிய உங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளித்திட அன்புடன் வேண்டு கிறேன்...!

ரா.செந்தில்குமார்...



வலைப்பூ தொகுப்பு : Click Here


twitter.com/Senthilkrisnan

Senthilkumarvision@yahoo.com

Worked at Ph.D Research Scholar
Lived in Coimbatore, 
Tamilnadu - India
36 followers/10,00,000Views