தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் ஊரில் சங்கரநாராயண சுவாமி கோவிலின் பின்புறம் ஸ்ரீவேலப்ப தேசிகரின் ஜீவசமாதி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரிவதுபோல.. சங்கரன்கோவில் ஊரிலிருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் அமைந்த ஊர் கரிவலம்வந்தநல்லூர். இந்த ஊரில் சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்கினி ஸ்தலமாக விளங்கும் பால்வண்ணநாதரின் கோவிலின் பின்புறம் பிரம்மஸ்ரீ சிவராஜ யோகி சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்து தன்னை நாடி வரும் பக்தர்களின் குடும்பத்தினருக்கு சிறந்த நண்பனாக இருக்கிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 வியாழன்று.. நடுப்பகல் சூரிய வெளிச்சத்தில் பிரம்மஸ்ரீ சிவராஜ யோகி சுவாமிகளின் ஜீவசமாதிக்கு விஜயமானபோது.. ஜீவசமாதி 1945ம் ஆண்டு, பிப்ரவரி 5, மாசி மகம் என்பதை ஜீவசமாதி நுழைவாயிலில் கண்டது.
1945ம் வருடம் என்பதை கண்ட பிறகு.. கோவை அவிநாசி சாலையிலுள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி 1945ம் ஆண்டு ஜி.டி.நாயுடு என அழைக்கப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு அவர்களால் தொடங்கப்பட்ட வரலாறு மனதில் ஞாபகமாக சுழன்றது. 2006ம் ஆண்டு தொடங்கி ஏழு ஆண்டுகள்.. 2013ம் வருடம் வரை, இந்த கல்லூரி மைதானத்தில் காலை வேளை ஓடுதல், ஊஞ்சலில் தொங்கி விளையாடுதல் என உடற்பயிற்சி செய்தமையால் எனது வாழ்வுடன் இரண்டறக் கலந்த கல்லூரியாக இருந்தமையால், 1945ம் ஆண்டு என்பது மின்னலென ஞாபகம் வந்தது.
கோவை மாவட்டத்திலுள்ள சூலூர் எனும் பெரிய ஊரின் அருகிலுள்ள கலங்கல் என்ற சிறிய கிராமத்தில் விடுதலை வீரன் பகத்சிங் பிறந்த நாளன்று பிறந்து ஆங்கிலேய அதிகாரி ராபர்ட் ஸ்டேன்ஸூடன் டூவீலர் வண்டியில் கோவை நகரம் வந்த கோபால்சாமி துரைசாமி நாயுடு அவர்கள் பஞ்சாலையை நடத்தும் அதிபராக உயர்ந்து அறிவியலில், விவசாயத்தில் எண்ணற்ற கண்டுபிடுப்புகளை செய்து கோவை நகரம் ஒரு பெரிய தொழில் நகரமாக வளர்வதற்கு கிரியா ஊக்கியாக இருந்தவர் என்பதால், கோபால்சாமி துரைசாமி நாயுடு சரித்திரத்தில் இடம் பெற்றார்.
No comments:
Post a Comment