Thursday, August 24, 2023

உலகம் சுற்றும் வாலிபன்..

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்த ஊர் கழுகுமலை. எனது ஊரான  குளக்கட்டாக்குறிச்சியிலிருந்து எட்டு கிமீ தூரம். கழுகுமலையிலிருந்து எனது ஊரின் வழியே செல்லும் பேருந்துகள் சிவகாசி நகரம் வரை செல்லும். இதனால், சிவகாசி மார்க்கம் சாலை என்பார்கள். பத்தாம் வகுப்பு வரை கோவில்பட்டி நகரில் நாடார் மேல்நிலை பள்ளியில் படிப்பை முடித்து, பதினொன்றாம் வகுப்பு கழுகுமலை அரசு மேல்நிலை பள்ளியில் கணித குரூப் எனும் வகுப்பில் சேர்ந்தபோது.. 1997ம் வருடம், ஜூலை மாதம். இதற்கு முன்பு, மே மாதம் ஐ.பி.எம் நிறுவனம் வடிவமைத்த டீப் ப்ளூ செஸ்(Deep Blue Chess Program) புரோகிராம் கணிப்பொறி உலக செஸ் சாம்பியன் கேரி காஸ்பரோவை வெற்றி வாகை சூடியிருந்தது.    

பதினொன்றாம் வகுப்பில் படிக்க ஊரிலிருந்து சைக்கிள் மிதித்து வந்தது. நண்பகல் உணவு சாப்பிட டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு சைக்கிள் மிதித்து நடுவூரணியில் அமைந்த சித்தி விநாயகர் கோவிலுக்கு வந்து நண்பர்களுடன் சாப்பிடுவது வழக்கமானது. எனது ஊரிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் செவலை மணி, காளிராஜ் உடன் இன்னும் இரண்டு பேர் வருவார்கள். அப்போதைய 1997ம் ஆண்டுகளில் அரச மரத்தடியில் சித்தி விநாயகர் கம்பீரமாக வீற்றிருப்பார். அருகில் அமைந்த எட்டு விநாயகர் கோவில் 1904ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதை கீழே அமைந்த படிக்கட்டில் 1904ம் ஆண்டு என கல்லிலே எழுதியதைக் கண்டு அறிந்தது. 

காளிராஜ் பாண்டியன் கழுகுமலை அரசு மேல்நிலை பள்ளியில் எனக்கு முன்பே படித்தவர். வெள்ளை உடை அணிந்து முறுக்கு மீசையுடன் கம்பீரமாக இருப்பார். எனது ஊரின் ரேஷன் கடையில் கடந்த இருபது ஆண்டுகளாக பணி செய்கிறார். 2018ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு ஸ்ரீசித்தி விநாயகர் கோவிலில் புனரமைப்பு வேலைகளை தனது சொந்த செலவில் செய்ததை "டைல்ஸ் உபயம்" என கல்வெட்டாக அமைந்து, காண்பதற்கு அழகுற காட்சி தந்தது. 

பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதச் செல்வதற்கு முன்பு சித்தி விநாயகரை, எட்டு விநாயகரை தரிசனம் செய்து சென்றால் பரீட்சை எழுதுகையில் படித்தவை அனைத்தும் ஞாபகம் வந்து எளிதாக எழுதிவிட முடியும். இதுபோலவே, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கையில் தேர்வு எழுதும் சமயங்களில் தரிசனம் செய்து சென்ற வேளை.. அனைத்தும் சிறப்பாக அமைந்தது. இந்த சேதியை எனது அன்புச் சகோதரியிடம் சொன்ன பிறகு சித்தி விநாயகர், எட்டு விநாயகரின் ஆன்மீகப் பேராற்றலை உணர்ந்து காலை, மாலை வேளைகளில் தரிசனம் செய்து மகிழ்ச்சி அடைவார். 

கடந்த ஆண்டு.. மேதகு அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினமன்று(அக்டோபர் 15).. சங்கரன்கோவில் ஊரிலிருந்து நெற்கட்டான் செவல் ஊருக்குச் செல்லும் சாலையில் அமைந்த வீரிருப்பு கிராமத்தில் அமைந்த உலக அமைதிக்கான புத்தரின் கோவிலில் அதிகாலை நான்கு மணிக்கு தொடங்கி நடக்கும் பிரார்த்தனையில் பங்கேற்க கழுகுமலை வழியே அதிகாலை டூவீலரில் வந்தபோது.. சித்தி விநாயகர் கோவிலில் தரிசனம் செய்து புறப்புடுகையில்.. 

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இயக்கி நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் ஜப்பான் நாட்டிலுள்ள காமகூரா புத்தர் கோவிலில் சயின்டிஸ்ட் முருகன்(எம்.ஜி.ஆர்) கண்டுபிடித்த அணுகுண்டு ஆராய்ச்சிக் குறிப்பினை அங்குள்ள புத்த துறவியிடம் கொடுத்து பத்திரமாக வைத்திருந்து தனது உடன் பிறந்த தம்பி ராஜு வந்து கேட்கும்போது மட்டுமே கொடுக்கும்படி சொல்லுவார். அணுகுண்டு ஆராய்ச்சிக் குறிப்பினை சயின்டிஸ்ட் முருகனிடம் வாங்கிய காமகூரா கோவிலின் புத்த துறவி அங்குள்ள ஒரு டைல்ஸினை தோண்டி எடுத்து பத்திரமாக வைப்பார். 2018ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா தினமன்று.. டைல்ஸ் உபயமான கல்வெட்டினை அப்துல் கலாமின் பிறந்த தினமன்று கண்டபோது, மேற்சொன்ன காமகூரா புத்தர் கோவிலின் நினைவுகள் மனதில் சுழன்றது. 

ஓம் நமசிவாய..

No comments:

Post a Comment