Tuesday, September 8, 2015

ஆதன் ஓரி

நெடுமான் அஞ்சியின் நண்பனாக விளங்கியவன் ஆதன் ஓரி. இவனும் கடையேழு வள்ளல்களில் ஒருவன். ஓரி என்னும் குதிரை மீது பயணம் போனதால் ஓரி என்றே அழைக்கப்பட்டான். யானைகளைப் புலவர்களுக்குப் பரிசாக வழங்கியவன். புலவர்கள் அந்த யானைகளை விற்றுப் பொருள் பெற்றார்கள். வேட்டையாடக் காட்டு வழியே சென்றபோது பாட்டுப் பாடிப் பரிசில் பெரும் பாணர் ஒருவர் காட்டில் இவனைப் பார்த்ததும் யாழ் எடுத்து இசைக்க,அதை கேட்ட ஓரி தன் மேனியில் அணிந்திருந்த அணிகலன்களை அப்பாணருக்கு கொடுத்தான்.

சேரனுடன் கூட்டு சேர்ந்து அதியமானைக் கொன்ற திருமுடிக்காரி, ஆதன் ஓரியை முதலில் கொன்று விட்டுத்தான் அதியமானிடம் சண்டைக்குப் போனான். புலவர்களுக்குப் பொன், பொருள், தேர், யானைகளைப் பரிசாகக் கொடுத்தவன். 
காரி மீது அன்பு கொண்ட கபிலர் என்னும் புலவர் ஒரியைப் பழித்துத் தூற்றினார்.

ஆய் அண்டிரன்

வேள் ஆய், பொதிகை மலைத் தலைவன். இம்மலையை அடுத்த ஆய்குடி இவனது தலைமை ஊர்.

ஆய் நாடு யானைக் கூட்டங்கள் நிரம்பிய நாடு. பரிசு வேண்டி வந்தோர்க்கு யானைகளைக் கொடுத்து மகிழ்ந்தவன். ஒரு முறை காட்டிற்குச் சென்றபோது நீலநாகம் ஒன்று ஒரு ஆடையினை விட்டுச் சென்றதாகவும், அதனை ஆய் எடுத்து வந்து தான் வழிபடும் சிவபெருமானுக்குச் சாத்தியதாகவும் கூறுகின்றனர்.

ஆய் அண்டிரன் தன்னைப் பகைத்த கொங்கரை எதிர்த்துப் போரிட்டான். தோல்வியுற்ற கொங்கர், வேல் முனையை மாற்றி எறிந்து விட்டு போர்களத்தை
விட்டு ஓட்டம் பிடித்தனர்.

தன்னிடமிருந்த எல்லாப் பொருட்களையும் புலவர்களுக்கும், இரவலர்களுக்கும் 
ஆய் கொடுத்துவிட்டதால் அவனிடம் வறுமை குடி கொண்டது. நாடும் அழகு குன்றியது.கொடுக்க ஒன்றுமில்லையே என்று எண்ணிய ஆய் மனம் வருந்த உடல் பாதித்து... ஒரு நாள் இறந்தே போனான்.

பேகன்

பொதினியைத் (பழனி) தலைநகராகக் கொண்டு ஆண்டான் பேகன் என்ற மன்னன். காட்டு வழிப்பாதையில் மழைக் காலத்தில் ஒருநாள் பயணம் செய்தான் பேகன். மயில் ஒன்று மேகத்தைக் கண்டு களிப்புற்று நடனமாடிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட பேகன் மயில் குளிருக்கு நடுங்குவதாக எண்ணி தான் போர்த்தியிருந்த விலையுயர்ந்த பட்டாடையை அம்மயிலுக்குப் போர்த்தி விட்டு அரண்மனைக்கு மகிழ்வுடன் நடந்தான்.

அக்கால மன்னர்கள் கொடைப்பண்பு மிக்கவர்களாக இருந்தார்கள் என்பதற்கு இந்த கதை ஒரு சரித்திர சான்று.

அதியமான் நெடுமான் அஞ்சி

சேர அரசர்களுக்கு முன் கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்த சிற்றரசர்களில் அதியமான் அரசர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். நாம், பாடங்களில் 
ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்தவன் அதியமான் என்று படித்திருப்போம். அதியமான் என்பது பரம்பரைப் பெயர். அதியமான் நெடுமான் அஞ்சிதான் ஔவைக்கு கனி கொடுத்தவன். நெடுமான் அஞ்சியின் தந்தை அதியமான் நெடுமிடல் அஞ்சி. பொகுட்டெழினி, நெடுமான் அஞ்சியின் மனைவி நாகையார் சிறந்த புலவர்.


நெடுமான் அஞ்சி தகடூரை(தருமபுரி) தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். நெடுமான் தந்தை நெடுமிடல்மீது சேரன் நார்முடிசேரல் போர் தொடுத்தான். அவனைக் கொல்லி மலையில் எதிர்த்துப் போர் புரிந்த நெடுமிடல் போரில் தோற்றுப்போய் தனது நண்பனான பாண்டிய அரசன் பசும்பூண் பாண்டியனிடம் போய் படைத்தலைவனாகச் சேர்ந்து விட்டான்.

துளு நாட்டு மன்னன் நன்னன் மீது பசும்பூண் பாண்டியன் போர் தொடுக்க, அவனது சேனைக்குத் தளபதியாகச் சென்றான் நெடுமிடல். வாகைப் பரந்தலை என்னும் இடத்தில் நன்னனின் படைத்தலைவன் மிஞிலியால் நெடுமிடல் கொல்லப்பட்டான்.

அதன் பிறகு அவனது மகன் அதியமான் நெடுமான் அஞ்சி தகடூருக்குத் தலைவனான். நெடுமான் அஞ்சி அரசனாக இருந்தபொழுது ஒரு முறை 
வேட்டையாடச் சேலத்தை அடுத்த கஞ்ச மலைக்குச் சென்றான். அங்கு உயர்ந்த பாறைப் பிளவின் உச்சியில் இருந்த நெல்லி மரத்தில் கனி ஒன்றிருக்க அதைப் பறித்து வந்தான்.

அதை உண்பவர்கள் நீண்ட ஆயுளும், உறுதியான உடல் வலிமையையும் பெறுவார்கள் என்று அறிந்த அதியமான் அக்கனியைத் தான் உண்ணாது, தன் அமைச்சரவையில் அவைப்புலவராக இருந்த ஔவைக்கு,அக்கனியைக் கொண்டு வந்து கொடுத்து உண்ணச் செய்தான். ஔவை உண்டால் தமிழ் வாழும் என்று கருதிய தன்னலமற்ற அரசன் அஞ்சி.

அவ்வையார் அக்கனியை உண்ட பிறகே அதன் பயன் பற்றிக் கூறினான். மன்னனின் சுயநலமற்ற பண்பை எண்ணிய ஔவை அரசனை மேலும் புகழ்ந்து பாடல் எழுதினார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நெடுமான் அஞ்சி மீது போர் தொடுக்கத் திட்டமிட்டான் தொண்டைமான் இளந்திரையன். அஞ்சிக்கோ அப்போது போர் புரியும் எண்ணம் சிறிதும் இல்லை.

அவனது மனவோட்டத்தைப் புரிந்து கொண்ட ஔவை இளந்திரையனிடம் தூது போனார்.

அதியமானின் மீது பொறாமை கொண்ட இன்னொரு அரசன் பெயர் திருமுடிக் காரி. காரியை நெடுமான் அஞ்சி போரில் தோற்கடித்து விடுகிறான். இதனால் வஞ்சம் தீர்க்க சேரமன்னன் பெருஞ்ச்சேரல் இரும்பொறையுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு அதியமானை எதிர்க்கிறான் காரி. அதியமான் மார்பில் அம்பு பட்டு காயம் காரணமாய் இறந்து விட்டான்.

சேரன் வென்ற அந்த இடம்தான் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலை.

தன் தந்தைக்கு உதவியாகக் குதிரை மலைப் பகுதியை ஆட்சி செய்து வந்த பொகுட்டெழினி, தந்தையைப் பகை சூழ்ந்திருப்பதை அறிந்து படையுடன் வந்து போரில் வீரமரணம் அடைந்து விட்டான்.

நாட்டுக்காக உயிர் நீத்தனர் நம் முன்னோர். வள்ளல்களில் ஒருவனாகத் திகழ்ந்த அதியமானின் வாழ்க்கை வஞ்சகர்களால் முடிந்தது.

Saturday, August 8, 2015

மெலுஹாவின் அமரர்கள்

இரண்டு வருடங்களுக்கு முன்பு கோவையிலுள்ள விஜயா பதிப்பகத்திற்கு புத்தகம் வாங்கச் சென்றபோது எதேச்சையாக அறிமுக  எழுத்தாளர் அமீஷ் எழுதிய  'மெலுகாவின் அமரர்கள்' புத்தகத்தை பார்த்தேன். ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையில் சாதனை படைத்திருப்பதாக நூலில் விளம்பரம் இருந்தது. எழுத்தாளர் சசிதாரூர் அவர்களும், மனதை கட்டிப் போடும் எழுத்து நடை என்று பாராட்டு தெரிவித்திருந்தார். சிவபெருமான் குறித்து அற்புதமான நாவல் என்று ஆங்கில இலக்கிய நண்பர்கள் சொன்னார்கள். ஆங்கிலத்தில் மாபெரும் வெற்றிபெற்று தற்போது தமிழிலும் மொழிபெயர்ப்பாகி விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது என்று சில நண்பர்கள் சொன்னார்கள். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் வாங்கிப் படித்தேன். வித்தியாசமான கோணத்தில் அமீஷின் எழுத்துநடை மனதை கொள்ளை கொண்டது. சிவபெருமான் குறித்த புராணக் கதைகளை பல வருடங்கள் ஆழ்ந்து படித்துள்ளார். இப்படியொரு மனிதன் (சிவன்) பாரத தேசத்தில் வாழ்ந்திருக்கிறாரா என்று எண்ணிப் பார்க்கும்போது வியப்பாக உள்ளது!

சிவன் சதி இருவருக்கும் நடக்கும் காதல் நிகழ்வுகள், மெலுஹா மக்களுக்காக சிவன் மேற்கொள்ளும் சாகசப் பயணங்கள், ஸ்வத்வீபத்தை அடைந்தவுடன் நீலகண்டர் என்று அழைக்கப்படுவது, நீலக் கழுத்துள்ள சிவன் குறித்து மக்களிடையே நிலவும் நம்பிக்கை, நாகர்களுடன் சிவன் போரிடும் சண்டைக் காட்சிகள் என்று மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. கடந்த பல வருடங்களாகவே சிவபெருமான் மீது மிகுந்த பக்தி உண்டு. ஓம் நமச்சிவாய மந்திரத்தை உச்சரிக்காத நாளே இல்லை என்று சொல்லலாம். இந்த நூலை படித்து முடித்தபோது ராஜமவுலி இயக்கத்தில் "பாகுபலி" சரித்திரத் திரைப்படம் வெளியானது. மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தில் இடம்பெறும் போர் காட்சியில் திரிசூல வியூகம் முறை பின்பற்றப்படும். மெலுஹாவின் அமரர்கள் கதையிலும் இந்த போர் காட்சி முறை விவரணையாக இருக்கும். ஒரு வேளை ராஜமவுலி இந்த நூலை படித்திருக்கலாம். மூன்று பாகங்கள் கொண்ட இந்த படைப்பில் தற்போது இரண்டாவது பாகமான "நாகர்களின் ரகசியம்" படித்துக் கொண்டிருக்கிறேன்..

Wednesday, June 3, 2015

தொழில்நுட்ப யுகத்தில் முகநூலின் பயன்பாடு - 15.05.14

கோவை மாநகரில் அமரர் பாலதண்டாயுதம் அவர்களின் நினைவு நாளையொட்டி மச்சக்காளிபாளையத்தில் நடைபெற்ற மாநாட்டில் முகநூல் குறித்து ஆற்றிய உரை..!