Wednesday, June 29, 2016

ஜோக்கர்

பிரைட் செருப்பு வாங்கி ஏழெட்டு மாசம் இருக்கும். இதைக் கால்ல போட்டுகிட்டு போகாத இடமில்லை. இப்ப பசங்க போடுற மாதிரி கூலர்ஸ் செப்பல், காலை பெல்டு மாதிரி மூடுற செப்பலெல்லாம் போட விரும்புறதில்லை. பிரைட் போட்டு நடக்குறதுக்கும் எளிமையாவும் இருந்தது.

ஒரு நாள் தீடீர்னு பெருவிரல் பக்கத்துல இருக்குற கயிறு அறுந்துருச்சி. நல்ல வேளையா செருப்புத் தைக்கிறவரு பக்கத்துல கடை போட்டு உக்காந்து இருந்தாரு. தைக்க கூலியா 20 ரூபாய் சொன்னாரு. அஞ்சு நிமிஷத்துல தச்சிக் கொடுத்துட்டாரு.

உங்களுக்கு ஒரு மாசம் எவ்வளவு வருமானம் வருதுன்னு கேட்டேன். மூணு நேரம் சாப்பாடுபோக தினமும் கையில 700 ரூபா நிக்குமுன்னு சொன்னாரு..

இவரை சொன்னப்ப என்ன ஆச்சரியமுன்னா, இலட்சக்கணக்குல பணம் கட்டி படிச்சி வர்ற இன்ஜீனியரிங் இளைஞர்கள் வேலை செய்யுறப்ப சாப்பாடுபோக மாசம் கையில 1500 ரூபா நிக்குது. கலை அறிவியல் கல்லூரியில வேலை செய்யுற உதவி பேராசிரியர்களுக்கு மாசம் 8000 ஊதியம்.. இன்னும் நிறைய!

ஒரே விஷயம் என்னதுன்னா, பணம் சம்பாதிக்குறதுக்கு பெரிய படிப்பெல்லாம் தேவையில்லை. காலம் மாறிப்போச்சு..

ரஷ்யா நாட்டோட அதிபரா இருந்த ஸ்டாலினோட அப்பா செருப்பு தைக்குற தொழிலாளியா வாழ்ந்தவரு...

Thursday, October 22, 2015

தி சாஷான்க் ரிடம்ப்ஷன்


தி சாஷான்க் ரிடம்ப்ஷன் படத்தை 2002 ம் வருடம் ஸ்டார் தொலைக்காட்சியில் பார்த்த ஞாபகம். அப்போது பார்க்கும்போது படம் நன்றாக இருப்பதாக மனதில் தோன்றியது. மொழி அவ்வளவாக புரியவில்லை. சமீபத்தில் IMDB இணையதளத்தில் சிறந்த 250 படங்களின் வரிசையில் முதலாவது இடத்தில் இருந்தது. தற்செயலாக வீடியோ டிவிடி கடையில் பார்த்தபோது இந்தப் படத்தின் தமிழ் மொழி குறுந்தகடு கிடைத்தது. 

படத்தின் மிகப்பெரிய பலமே திரைக்கதையும், உரையாடலும்தான்...

'ஆண்டி' கதாபாத்திரத்தில் நடித்துள்ள டிம் ராப்பின்ஷும், மார்கன் பிரிமேனும் அற்புதமான நடிப்பை செய்துள்ளது மனதை கவர்ந்தது. ஆண்டி தனது மனைவி வேறொருவனுடன் தகாத உறவு கொள்ளும்போது, கொலை செய்யும் நோக்கத்துடன் காரில் அமர்ந்திருக்கும்போது வேறொருவன் கொலை செய்கிறான். அதன்பிறகு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை பெறுகிறான். கொடும் சித்தரவதை நிகழும் இடமாக ஷாஷாங் சிறைச்சாலையில் அடைபடுகிறான். சிறைச்சாலை அச்சத்தை ஏற்படுத்துகிறது. கொலைக்குற்றத்தில் ஈடுபட்டு மார்கன் பிரீமேன் இவனுக்கு முன்பே சிறைச்சாலையில் தண்டனைக் கைதியாக ஆயுள் தண்டனை அனுபவிக்கிறார். இருவருக்குள்ளும் சிநேகிதம் உருவாகிறது. கொஞ்சம்கூட கவலைகொள்ளாத ஆண்டியின் நடவடிக்கைகள் மார்கனை கவருகிறது. ஒரு மாலை நேர சந்திப்பில் ஆண்டி மார்கனிடம் சிறிதான சுத்தியல் வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறான். மார்கன் அதற்கு செலவாகுமே என்று சொல்லும்போது அதற்கான பணத்தையும் கொடுக்கிறான். சுத்தியல் சிறைச்சாலைக்கே உரிய ரகசியமான முறையில் பணியாளர் ஒருவர் மூலம் ஆண்டிக்கு கிடைக்கிறது. அதன்பிறகான படத்தின் திரைக்கதை இதயத்தையே உலுக்குகிறது. 

ஒவ்வொரு நாளும் தன்னுடைய சிறைச்சாலையின் சுவரை சுத்தியலால் தட்டித் தட்டி தன்னுடைய வேலையை ஆரம்பிக்கிறான். அதன்பிறகு சிறைச்சாலையில் பல மாறுதல்களை செய்கிறான். சிறைச்சாலை நூலகத்தில் பல புதிய புத்தகங்களை வரவழைக்கிறான். தன்னுடைய வங்கி அதிகாரி என்ற பணி அனுபவத்தில் சிறை அதிகாரிகளை தன் வசப்படுத்தி, வரி ஏய்ப்பு செய்வதற்கு உதவுகிறான். இதன் மூலம் ஆண்டியின் செல்வாக்கு உயருகிறது. சிறைச்சாலை அதிகாரிகளின் பல அந்தரங்கமான விசயங்கள் இவன் வசமாகிறது. தான் செய்யாத கொலைக்குற்றம் வேறொரு கைதியின் மூலம் இன்னொருவன் செய்தான் என்று தெரியவரும்போது குற்றம் நடந்த நிகழ்வை சொல்பவனை அதிகாரிகள் சுட்டுக் கொள்கிறார்கள். இதனிடையே சிறைச்சாலையிலிருந்து தப்புவதற்குண்டான வேலைகளை ஆண்டி கச்சிதமாக செய்துகொண்டே இருக்கிறான். ஒரு பொய்யான மனிதன் என்ற பிம்பத்தை உருவாக்கி அதன் மூலம் வரி ஏய்ப்பு செய்வதன் மூலம், சிறையிலிருந்து தப்பிச் சென்ற பிறகு ஆதாரங்களுடன் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புதுறையிடம் சிக்க வைக்கிறான். ஆண்டி சிறையிலிருந்து தப்பும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. 'மர்லின் மன்றோ' வால்போஸ்டரை சிறை அறையினுள் ஒட்டி வைத்து அதன் பின்புறம் கச்சிதமாக இருபது வருடங்கள் ஓட்டை போட்டு தப்பிப்பது, சிறையின் பின்புறமுள்ள தண்ணீர்க் குழாயை உடைத்து மூணே முக்கால் கிலோ மீட்டர் தூரம் குழாயினுள்ளே பயணித்து, சிறைச்சாலையை விட்டு வெளியேறியதும் விடுதலை பெற்ற சாகாசத்துடன் மழையில் நனைவது அசாத்தியமான மனிதனின் செயல்பாடாக பிரமிக்க வைக்கிறது. முதாலாளித்துவத்தின் ஆணிவேரையே பிடுங்கி எறிவதுபோல் உள்ளது. அதன்பிறகு மார்கன் சிறையிலிருந்து விடுதலையானதும் ஆண்டியை தேடிச்சென்று அடையும் காட்சி கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. மனித வாழ்வின் உன்னதநிலைகளை இந்தப் படத்தில் பார்த்தபோது, இதயமே உறைந்துவிட்டது. இதற்கு முன்பு வில்லியம் வைலரின் "பென்ஹர்" திரைப்படத்தில் தொழு நோயாளிகள் படித்துறையில் மிச்செலா தன்னுடைய அம்மா, சகோதரியை பார்க்கும்போது இதயமே உறைந்துபோகிற அளவிற்கு உணர்ந்திருக்கிறேன். அதுபோன்று இந்தப் படத்தில் மார்கனுடனான ஆண்டியின் உரையாடல் மனதை கட்டிப்போட்டது. இந்தப் படத்தை காலதாமதமாக பார்த்தது வருத்தம்தான். இருப்பினும் இந்த வருடத்தில் பார்த்தது மனநிறைவைத் தந்தது...

Tuesday, September 8, 2015

நாகர்களின் ரகசியம்

எழுத்தாளர் அமிஷின் சிவா முத்தொகுதியின் இரண்டாவது நூலான 'நாகர்களின் ரகசியம்' இனிமையானதொரு வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்தியது.

4000 வருடங்களுக்கு முன்பு மனிதனாக வாழ்ந்த ஒரு மனிதர், இன்று கடவுளாக வணங்கப்படுகிறார். அந்த மனிதரின் வாழ்க்கைப் பயணித்தினூடே நிகழும் சம்பவங்கள் நம்மை திகைக்க வைக்கிறது. பிரகஸ்பதியுடனான நட்பு, சதியுடனான திருமண வாழ்க்கை, சதியின் தந்தையார் செய்யும் மாயவலை சூழ்ச்சிகள் என்று கதை செல்லும் விதமே வியப்பில் ஆழ்த்துகிறது. நாகர்களையும் அவர்களின் அங்ககீனமான தோற்றத்தையும் குறிப்பிட்டு அவர்களின் மீதான வெறுப்பை உண்டாக்கும் பட்சத்தில், கிராமத்தில் புகுந்த புலிகளைக்  கொன்று மக்களை காப்பாற்றச் சென்ற இளவரசி சதியை 'நாகா' உயிரை பணயம் வைத்து காப்பாற்றும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

அதன்பிறகான உரையாடலில் 'நாகா' சதியின் கருவில் பிறந்த குழந்தை என்று தெரியவரும்போது, நம்மை ஆச்சரியத்தில் மிதக்கவிடுகிறது. அதன் பிறகு அவிழும் ரகசியத்தின் முடிச்சுகள் புத்தகத்தை கீழே வைக்க முடியாத அளவு செய்கிறது. சிவபெருமானின் புராண வரலாற்றை புதிய கோணத்தில் எழுதி நம்மை ஆச்சரியத்தில் மிதக்க விடுகிறார் எழுத்தாளர் அமிஷ்.

'நாகா' பற்றிய ரகசியத்தை சிவனிடம் சதி சொல்லும் காட்சிகள், நாகா -வினுடைய கரங்களில் ஒருவித சின்னத்தைப் பார்த்தவுடன் அடையும் பதற்றம், அதன் பிறகான சிவனின் கோபம் என்று அடுத்த கட்டமான கதைக்களம் செல்லும். பிரகஸ்பதியின் ரகசியத்தை தேடி கங்கை நதி தீரத்தில் கப்பலில் செல்லும்போது சிவனும் அவனுடைய பரிவாரங்களும் மலைக் காடுகளில் 'பரசுராமருடன்' சண்டையிடும் காட்சிகள் வாசிப்பில் புதியதொரு அனுபவம். 'சோமரச பானம்' புதினத்தில் ஏற்படுத்தும் பிரமிப்பு, சதியின் குழந்தை பிறக்கும்வரை பரவசத்தில் ஆழ்த்துகிறது.

சிவனின் குழந்தை ஏதைச்சையாக கோயிலுக்குள் விளையாடும்போது, சிங்கங்களின் தாக்குதலிருந்து 'நாகா' தன்னுடைய உயிரைப் பணையம் வைத்து மீட்கும் காட்சி அற்புதம். அதன்பிறகு நாகாவின் மீது சிவனின் பரிவு கதையின் நெருடல். உணர்ச்சிமயமான எண்ணங்களை வெளிப்படுத்திய வண்ணம் சிவன் இருப்பார்.

புதினத்தில் மனுதர்மத்தை உருவாக்கிய 'மனு' தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த நிகழ்வு யுகத்தின் பயணம். சிவபக்தனாகிய எனக்கு 'மெலுஹாவின் அமரர்கள்', 'நாகர்களின் ரகசியம்' புதியதொரு வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்தியது. மூன்றாவது தொகுதியான 'வாயுபுத்ரா'வின் தமிழ் பதிப்பு இந்த செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது!

குமணன்

கொங்கு மண்டலத்தின் முதிரம் என்னும் ஊரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவன் குமணன். (இன்றைய பழனி மலை வட்டம் அருகே உள்ள குதிரை மலை). இல்லை என்று வருவோர்க்கு எல்லாமும் கொடுத்த வள்ளல்.

அண்ணன், தான தருமம் செய்து நற்பெயர் வாங்கியது குமணனின் தம்பி
இளங்ககுமணனுக்குப் பிடிக்கவில்லை. பொறாமை நெஞ்சில் தீயாகத் தகிக்க, அண்ணணனைக் காட்டிற்கு விரட்டி விட்டு நாட்டைப் பிடுத்துக் கொண்டான். காட்டில் குமணன் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தான். புலவர்கள் எல்லாரும்
ஈதல் யாருமின்றி மிகவும் வறுமையில் வாடினர்.

பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் வறுமையைத் தாங்க முடியமால் காட்டில் குமணனைத் தேடி அலைந்தார்.

குமணனும் துன்பத்தில்தானே காட்டில் திரிகிறான். அவனால் புலவருக்கு என்ன தரமுடியும்? இருந்தாலும் தன்னைப் பாடிய புலவரை வெறுங்கையுடன் அனுப்ப மனமின்றித் தனது வாளைக் கொடுத்து, தனது தலையைக் கொய்து கொண்டுபோய் இளங்குமணனிடம் கொடுத்தால் பரிசு தருவான், வாங்கி பசியாறுங்கள் என்கிறான் குமணன்.

ஆனால் புலவர் குமணனின் வாளை மட்டும் வாங்கிக்கொண்டு இளங்குமணனிடம் 
கொண்டு போய்க் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பின் இரு குமணன்களும் என்னவானார்கள் என்று தெரியவில்லை.

நாடகம் ஒன்றில் மட்டும்,

குமணனிடம் வாளை வாங்கிய புலவர், வாழை மரத்தின் அடிவேரில் தலைபோல் செய்துகொண்டு போய்க் காட்டியதாகவும், அது கண்டு இளங்குமணன் துணுக்குற்று மனம் திருந்தி அழுததாகவும் பிறகு புலவர் உண்மையை உரைக்கக் காட்டில் திரிந்த குமணனை மீண்டும் அழைத்து வந்து நாட்டுக்கு அரசனாக்கினான் என்றும் கூறுகிறது.

ஆதன் ஓரி

நெடுமான் அஞ்சியின் நண்பனாக விளங்கியவன் ஆதன் ஓரி. இவனும் கடையேழு வள்ளல்களில் ஒருவன். ஓரி என்னும் குதிரை மீது பயணம் போனதால் ஓரி என்றே அழைக்கப்பட்டான். யானைகளைப் புலவர்களுக்குப் பரிசாக வழங்கியவன். புலவர்கள் அந்த யானைகளை விற்றுப் பொருள் பெற்றார்கள். வேட்டையாடக் காட்டு வழியே சென்றபோது பாட்டுப் பாடிப் பரிசில் பெரும் பாணர் ஒருவர் காட்டில் இவனைப் பார்த்ததும் யாழ் எடுத்து இசைக்க,அதை கேட்ட ஓரி தன் மேனியில் அணிந்திருந்த அணிகலன்களை அப்பாணருக்கு கொடுத்தான்.

சேரனுடன் கூட்டு சேர்ந்து அதியமானைக் கொன்ற திருமுடிக்காரி, ஆதன் ஓரியை முதலில் கொன்று விட்டுத்தான் அதியமானிடம் சண்டைக்குப் போனான். புலவர்களுக்குப் பொன், பொருள், தேர், யானைகளைப் பரிசாகக் கொடுத்தவன். 
காரி மீது அன்பு கொண்ட கபிலர் என்னும் புலவர் ஒரியைப் பழித்துத் தூற்றினார்.

ஆய் அண்டிரன்

வேள் ஆய், பொதிகை மலைத் தலைவன். இம்மலையை அடுத்த ஆய்குடி இவனது தலைமை ஊர்.

ஆய் நாடு யானைக் கூட்டங்கள் நிரம்பிய நாடு. பரிசு வேண்டி வந்தோர்க்கு யானைகளைக் கொடுத்து மகிழ்ந்தவன். ஒரு முறை காட்டிற்குச் சென்றபோது நீலநாகம் ஒன்று ஒரு ஆடையினை விட்டுச் சென்றதாகவும், அதனை ஆய் எடுத்து வந்து தான் வழிபடும் சிவபெருமானுக்குச் சாத்தியதாகவும் கூறுகின்றனர்.

ஆய் அண்டிரன் தன்னைப் பகைத்த கொங்கரை எதிர்த்துப் போரிட்டான். தோல்வியுற்ற கொங்கர், வேல் முனையை மாற்றி எறிந்து விட்டு போர்களத்தை
விட்டு ஓட்டம் பிடித்தனர்.

தன்னிடமிருந்த எல்லாப் பொருட்களையும் புலவர்களுக்கும், இரவலர்களுக்கும் 
ஆய் கொடுத்துவிட்டதால் அவனிடம் வறுமை குடி கொண்டது. நாடும் அழகு குன்றியது.கொடுக்க ஒன்றுமில்லையே என்று எண்ணிய ஆய் மனம் வருந்த உடல் பாதித்து... ஒரு நாள் இறந்தே போனான்.