Monday, June 2, 2014

கம்பியூட்டர் மூலம் ஒரு இனிமையான காதல்

என் இனிய கம்பியூட்டரே,
            
இது நான் உனக்கு Input ஆக அளிக்கும் Document, இதை Read செய். Delete செய்து விடாதே. நான் உன்னைக் கண்டேன் Windows ல், முதன் முதலாக.. அன்றிலிருந்து நான் தொடங்கிவிட்டேன் உன்னைக் காதலிக்க. நீ வெளியில் வரும்போது நான் Click செய்தேன் என் கண்களைக் கொண்டு...!! அதற்கு இந்த Result - ஐயும் காட்டி விட்டாய், நீ என் மனதில் Lotus போல் பூத்து விட்டாய். நாம் இருவரும் TIDEL Park - ல் சந்தித்தோம். பேசினோம். காதலித்தோம். 

நாம் இருவரும் காதலிப்பது உன் அண்ணன் Electricity - க்கு பிடிக்க வில்லையா? அல்லது உன் தம்பி COBOL - க்கு பிடிக்கவில்லையா? நான் உன் அருகில் Chat - பண்ண வரும் போது Off பண்ணிவிடுகிறான் உன் அண்ணன் Current - ஐ...


உன் Telephone Number 555 எனபதை Directory மூலமும், உனது Home க்குரிய Path - ஐ I Mean Address  உன் File ன் மூலமும் அறிந்து கொண்டேன். நான் முதன்முதலில் உனக்களித்த Love Letter - ஐ Access செய்து Memory Uinit - ல் போட்டாயா? அல்லது Access பண்ணாமல் Recycle Bin - ல் போட்டாயா?
நீ என்னைப் பார்க்காவிடில் ஆகி விடுகிறது என் மனம், சுறுசுறுப்பு ஆரம்ப கால Processor போல. நீ என்னைக் கடைக்கண் பார்வையால் பார்க்கும்போது ஆகி விடுகிறது என் மனம் Pentium 4 Processor போல.


மற்றவர்களின் காதல் கண்களில் தொடங்கி மனதில் முடியும். நம் காதல் மனதில் தொடங்கி கண்களில் முடியட்டும். அதுதான் நம் காதலின் Basic. நம் காதலுக்கு Virus யாருமல்ல...!! நாம் இருவரும் காதல் Language பேசும்போது மூன்றாவது ஆள் எதற்கு? யாரா? அவன்தான் என்றும் உன்னுடன் இருக்கும் Compiler. அவனை நீ Delete செய்து Recycle Bin - ல் போடுவது எப்போது?

உன் தந்தை JAVA - ல் உள்ள MS-Office ல் வேலை பார்ப்பதாக அறிந்தேன். அங்கு சென்று நம் காதலுக்கு ஒரு Powerpoint இடுகிறேன். நான் சென்று திரும்பும் வரை Windows - ல் கண்வைத்து காத்திரு...!! C YOU...!!

Sunday, May 25, 2014

12 years a Slave - 2013 ம் ஆண்டில் ஆஸ்கர் விருது வென்ற படம்

இரண்டு நாளுக்கு முன்பு நான் எழுத்தாளர் ஆட்டோ சந்திரன் அண்ணன் அவர்களுடன் 2013 ம் ஆண்டில் மூன்று ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற திரைப்படமான 12 Years a Slave என்ற ஆங்கிலப் படத்தைப் பார்த்தோம். மனதில் ஈவு இரக்கமற்ற கல் மனது படைத்தவர்களால் மட்டும்தான் கண்ணீர் சிந்தாமல் பார்க்கமுடியும். ஒவ்வொரு காட்சிகளுமே மனசாட்சியை உலுக்கக்கூடியது. சாலமன் என்ற நீக்ரோ மனிதரால் எழுதப்பட்ட நாவலை மையமாக வைத்து, உண்மைக் கதையை படமாக்கி இருக்கிறார்கள். ஹேரியத் பீச்சர்ஸ் ஸ்டோவின் நாவலான டாம் மாமா குடில் அமெரிக்காவில் உள்நாட்டுப் போரைத் தோற்றுவித்தது. 1850 ம் ஆண்டுகளில் நடக்கும் கதைக்களம். ஆனால் அப்போது 12 Years a Slave என்ற நாவல் கவனம் பெறாதது வருத்தத்திற்குரிய விசயம்தான். இப்போது திரைப்படமாக வந்த பிறகு உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது மகிழ்ச்சிக்குரிய விஷயம்..!


அமெரிக்கா என்ற ஒரு நாடு கறுப்பின மக்கள் மீது எந்த அளவிற்கு கொடூரமானத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் என்பதை இந்த படத்தைப் பார்ப்பத்தின் மூலம் உணர முடிகிறது. ஒரு மனித சமுதாயத்தை எந்த அளவிற்கு இழிவுபடுத்தி இருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்க்கும்போது, இதயமே வெடித்துவிடும் போல் உள்ளது. கறுப்பின மக்களின் செத்துப்போன பிணங்களின் மீது தங்களுடைய நல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் அமெரிக்கர்கள் என்பதை உணர முடிகிறது. 


அமெரிக்க நாட்டின் கொலை செய்தவர்களின் பட்டியலை சொன்னால் வியப்பு மேலிடும். ஆப்ரஹாம் லிங்கனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்கள். மார்ட்டின்லூதர்கிங்கை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார்கள். சதாம் உசேனைத் தூக்கிலிட்டார்கள். லிபியாவின் மும்மர் கடாபியை கொலை செய்தார்கள். ஒசாமா பின்லாடனைக் சுட்டுக் கொன்றார்கள். சிலி நாட்டு அதிபர் அல்வேடர் சயாண்டோவை அதிபர் மாளிகையிலேயே குடும்பத்தோடு குண்டு வீசிக் கொன்றார்கள். அர்ஜென்டினா நாட்டின் சேகுவேராவைக் கொலை செய்தார்கள். ஜப்பான் நாட்டின் மீது நாசகார அணுகுண்டினை வீசி லட்சக்கணக்கான மக்களை கொன்றதோடு, ஆயிரக்கணக்கான மக்களை அனாதையாக்கினார்கள். ஈராக் நாட்டின் மீது குண்டு வீசி அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கான பேரை அனாதை யாக்கினார்கள். தென்அமெரிக்க அதிபர்கள் பதினான்கு பேரை கொலை செய்திருக்கிறார்கள். இன்னும் உலகை அதிகாரம் செய்வதற்கு கோடிக்கணக்கான மக்களை கொள்வதற்கும் தயங்க மாட்டார்கள். இப்படியாக பட்டியலை மேலும் மேலும் அடுக்கிக்கொண்டே போகலாம்..!! 


இந்த திரைப்படத்தில் வரும் காட்சிகள் மேற்சொன்ன விசயங்களை விட 
அதிபயங்கரமானவை. இரண்டு நூற்றாண்டுகள் ஆப்பிரிக்க மக்களை அடிமைகளாக வைத்திருந்து சித்ரவதை செய்திருக்கிறார்கள். வரலாற்றின் பக்கங்களில் இந்த இரத்தக் கரை படிந்த அத்தியாத்தை பக்கம் பக்கமாக உலகெங்கும் உள்ள எழுத்தாளர்களும், அறிவுஜீவிகளும் எழுதிக் கொண்டி -ருக்கிறார்கள். அமெரிக்கர்களால் ஒரு வரியைக் கூட மாற்றி எழுதச் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு உலகத்திலேயே கொடூரமானவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால் முந்தைய தலைமுறை இப்படி இருந்திருக் -கிறார்கள். இப்போது உள்ள அமெரிக்கர்களையும் அப்படிச் சொல்ல முடியாது. மின்சாரத்தைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு அமெரிக்கர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ் தன்னுடைய மென்பொருளின் மூலம் உலகையே தன் வசம் கொண்டுள்ளார். அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தாரின் வலைப்பூ, முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை உருவாக்கி உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு முகவரியைத் தேடிக் கொடுத்திருக்கிறார்கள். உலகையே மாற்றி இருக்கிறார்கள். அதற்கு நாம் நூற்றாண்டுகளுக்கும் கடமைப்பட்டு இருக்கிறோம்..!! ஆட்சியாளர்கள் கொடுங்கோலர்களாக இருக்கும் பட்சத்தில் மக்கள் என்ன செய்வார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது..!!

Saturday, May 17, 2014

இந்தியாவில் பிறந்த இளைஞர் பட்டாளங்களே..!!

இந்திய தேசத்து மண்ணில்
கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இளைஞனே!!
உன்னுடைய வாழ்வின் முன்மாதிரி பில்கேட்ஸா?
உன்னுடைய கனவில் பாரக் ஒபாமா வருகிறாரா?
ஆம் என்றால் நீ இந்தியாவில் பிறந்த இளைஞன்தான்..!!


ஏனெனில் இந்தியக் குடிமகன் மட்டும்தான்
இந்திய தேசத்தை விட்டு வெளியே
செல்ல ஆசைப்படுவான்..!!

உன் அதிகபட்ச கனவு
6000 மைல்கள் தாண்டி உள்ள அமெரிக்கா
உன்னுடைய குறைந்த கனவு
2000 மைல்கள் தாண்டி உள்ள ஐரோப்பா..!!


நீ அமெரிக்கா தூதரகத்திற்கும்
ஐரோப்பிய தூதரகத்திற்கும் நடையாய்
நடந்து உன் செருப்பை மட்டும் அல்ல
அந்த ரோட்டையும் தேய்ப்பாய்..!!

கடைசியில் உனது கனவு நனவாகி
விமானத்தில் 20000 அடி உயரத்தில்
பறந்து உனது தாயை மட்டும் அல்ல..
உனது தாய்நாட்டையும் மறந்து செல்வாய்..!!
இந்தக் கவிதை நான் வரைவது
அமெரிக்கா, ஐரோப்பாவுக்குச் செல்லும்
அனைவரையும் அல்ல..!!
அந்த நாட்டிற்கு சென்றுவிட்டு
தான் பிறந்த பாரத மண்ணையே
மறந்து விடுகிறார்களே..
அந்த தவப்புதல்வர்களுக்காக..!!

பொருளீட்டுவதற்காக தேசங்கள்
கடந்து செல்லலாம்..
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
என்பது ஆயிரங்காலத்து பழமொழி..!!
திரைகடல் ஓடி ஜனனம் செய்த
மண்ணை மறந்து விடு என்பதை
எப்படி ஜீரணிக்க முடியும்..!!
திரவியம் தேடி பிறந்த மண்ணுக்காக
என்ன செய்யப் போகீறார்கள்..!!
இந்திய மண்ணில் மாளிகை கட்டி
இலட்சங்கள் மதிப்புள்ள வாகனங்கள் வாங்கி

சூரியனின் கதிர்கள் மேனியில் படமால்
நாலாதிக்கும் சுற்றுலா சென்று
நாட்களை ஆனந்தமாய்க் கழிப்பார்கள்..!!
வேறென்ன செய்வார்கள்...!
இந்த பரந்துபட்ட பழம்பெருமை வாய்ந்த
பாரத  தேசத்திற்காக..!!
ஒரு வேளை உணவின்றி செத்துமடியும்
ஏழைகள் பற்றி தேசத்தை கட்டி ஆளுகின்ற
அரசியல்வாதிகளுக்கே அக்கறையில்லாதபோது
பாவம் மெத்தப் படித்த பட்டதாரிகளுக்கு
என்ன கவலை இருக்கப் போகிறது..!!
முகநூலில் டுவிட்டரில்
புகைப்படங்களைப் பிரசுரம் செய்து
ஐயோ!! பாவம் ஏழைகள் உணவின்றித்
தவிக்கிறார்கள் என்று காவியம் எழுதுவார்கள்..!!
பாரத தேசத்தின் தலைவிதியை
தலைகீழாக மாற்றப் போகிறேன்
என்று வீரகாவியம் எழுதுவார்கள்..!!
இதோ நான் எழுதிக் கொண்டிருக்கிறேனே
வலைப்பூவில் வீரகாவியம்.. அதுபோல..!!
நான் செயல்களை செய்துவிட்டு
எழுதுகிறேன்..!!
மற்றவர்களின் படைப்புகளை
பகிர்ந்து கொள்ளாமல்
என்னுடைய செயல்களை மட்டுமே
காவியமாக வரைகிறேன்..!!

தேசம் கடந்து கடல் கடந்து பொருளீட்டச் சென்று
தான் சென்ற தேசமே பெரிதென்று வாழுகின்ற
புண்ணிய பூமி என்று வாழுகின்ற
பிறந்த பாரத மண்ணின் பெருமை மறந்த
உன்னை இந்தியத்தாயின் கண்ணில் விழுந்த
தூசி என்று ஒதுக்க முடியாது..!
நீ என் இந்தியத்தாயின் கண்ணைக் குத்திய ஊசி..!!

எங்கள் தப்புதான்
சிறுவயதில் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை
உன் சட்டையில் ஊசியால் குத்தியிருக்கக்கூடாது..!
இதயத்தில் ஆணியாய் அடித்திருக்க வேண்டும்..!!

Wednesday, May 14, 2014

செல்லுலாய்ட் - 2013 ம் ஆண்டில் இந்திய அரசின் தேசிய விருது பெற்ற மலையாளப் படம்


செல்லுலாய்ட் என்ற வாழ்க்கை வரலாறு மலையாளப் படம் பிப்ரவரி 15, 2013 ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. சிறந்த படத்திற்கான இந்திய அரசின் தேசிய விருதைப் பெற்றது. நடிகர் பிருத்திவிராஜ் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் இந்தப் படத்தின் DVD யை வாங்கிப் பார்த்தேன். இந்தப் படம் வெளிவந்தபோது பரபரப்பாக பேசப்பட்டது. திரைப்படம் வெளியானபோது  கோவையிலுள்ள கர்னாடிக் திரையரங்கில் போய் பார்க்கலாம் என்று சென்றபோது, படத்தை எடுத்து விட்டார்கள். அதனால் என்ன, இப்போது உள்ள தகவல் தொழில் நுட்பத்தில் இரண்டு நாட்களில் youtube ல் பதிவேற்றம் செய்து விடுவார்கள். பெரும்பாலான படங்களை youtube ல் இருந்து பதிவிறக்கம் செய்து பார்ப்பேன். ஆனால் செல்லுலாய்ட் திரைப்படம் 1930 ம் ஆண்டுகளில் சினிமாவை தெய்வீகமாக நினைத்து, மலையாள திரைப்பட உலகில் தான் ஒரு முன்னோடியாக இருக்க வேண்டும் என்று நினைத்த J.C.டேனியல் அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய திரைக்காவியம். அதனால் ரூ.120/- மதிப்புள்ள DVD யை வாங்கிப் பார்த்தேன். திரைக்காவியம் என் இதயத்தையே உலுக்கிவிட்டது. மலையாள திரைப்பட உலகில் சகாப்தம் படைத்த ஒரு மனிதர் J.C டேனியல்..!


கேரளா மாநிலத்தில் உள்ள வைக்கம் என்னும் ஊரில் ஈ.வெ.ராமசாமி பெரியார் அவர்கள், தீண்டாமை எனும் கொடிய சாதி வெறிக்கு எதிராக போராட்டம் நடத்தி வெற்றி வாகை சூடினார். அப்போது இருந்த பிரிட்டீஷ் காலனி  ஆதிக்கத்தில் இந்தியா முழுவதும் தீண்டாமைக் கொடுமை தலைவிரித் -தாடியது. நாடெங்கிலும் பல தலைவர்கள் தீண்டாமையை ஒழிக்கப் போராடினார்கள். இப்படிப்பட்ட ஒரு கொடுமையான சூழலில் கேரள மாநிலத்தில் ஒரு தலித் பிரிவைச் சேர்ந்த ரோசி என்ற பெண்மணியை கதாநாயகியாக டேனியல் நடிக்க வைக்கிறார்.

ஜே.சி.டேனியல் 
அகஸ்தீஸ்வரம் ஜே.சி.டேனியலின் சொந்த ஊர். பல் மருத்துவரான இவருக்கு சினிமா எடுக்கும் ஆர்வம் வருகிறது. அப்போதைய படங்களில் ஒலி அமைப்பு கிடையாது. சலனப்படங்கள்தான் எடுக்க முடியும். ஊரிலுள்ள நண்பர்களுடன் தன்னுடைய அபிலாஷைகளை சொல்லுகிறார். பொருட்செலவு அதிகமாகுமே என்று சொல்லும்போது, கடன்வாங்கி படம் எடுத்துவிடலாம் என்று நம்பிக்கையாக சொல்லுகிறார். அழகான மனைவி, குழந்தைகளுடன் சந்தோசமாக வாழும்போது, எதற்காக கடுமையாகப் போராடி படம் எடுக்க வேண்டும் என்று நண்பர்கள் சொல்லும்போது, பம்பாய் பட்டணத்தில் தாதா சாகேப் பால்கே, மதராசப் பட்டணத்தில் நடராஜ முதலியார் போன்றோர் சினிமா எடுக்கிறார்கள். நாமும் அதைப் போன்று சினிமா எடுத்து, கேரள மாநிலத்திற்கே முன்னோடியாக இருக்க வேண்டும் என்று கூறும்போது, J.C.டேனியலாக பிருத்திவிராஜ் நன்றாக உரையாடல் செய்கிறார். 


பம்பாய் பட்டணத்திற்குச் சென்று தாதா சாகேப் பால்கே அவர்களை சந்திக்கிறார். தன்னுடைய விருப்பத்தைச் சொல்லுகிறார். அவருடன் சில நாட்கள் தங்கி படம் எடுப்பதற்கான தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்கிறார். படத்தில் நடிக்க கதாநாயகியை பம்பாயிலேயே தேர்வு செய்கிறார். அந்தக் கதாநாயகியை கேராளாவிற்கு அழைத்து வந்த பின்பு, அது வேண்டும், இது வேண்டும் என்று  ஏகக்கெடுபிடி செய்கிறார். உங்களுடைய சாகவாசமே வேண்டாம் என்று அவர்களை அனுப்பிவிட்டு, அங்கேயே ஒரு தலித் குடும்பத்தைச் சேர்ந்த P.K.ரோசி என்ற பெண்ணைத் தேர்வு செய்கிறார்.


P.K.ரோஷி 
தன்னுடைய முதல் சலப்படத்திற்கு விகதகுமாரன் (The Lost Child) என்று பெயர் வைத்து, பிரித்திவிராஜ் கதாநாயகனாகவும், அவருடைய சிறுவயது மகனும் நடிக்கிறார்கள். படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்த பிறகு, திருவனந்தபுரத்திலேயே காட்சிப்படுத்த கிராமம் கிராமமாக சென்று விளம்பரம் செய்கிறார்கள். ஜமீன்தார்கள், மிராசுதாரர்கள், திவான்கள், பொதுமக்கள் என்று நூற்றுக்கணக்கான பேர் படத்தைப் பார்க்க வருகிறார்கள். அப்போது முதல் காட்சியைப் பார்க்க கதாநாயகியாக நடித்த ரோசியும் வருகிறார். மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், இந்தப் பெண்ணும் எங்களுடன் சரிசமமாகப் அமர்ந்து படம் பார்க்ககூடாது என்று ரகளை செய்கிறார்கள். பிருத்திவிராஜ் அவர்களை சமாதானப்படுத்தி சினிமாக் கொட்டகையில் அமரவைக்கிறார். கதாநாயகியிடம் ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி, நாம் அடுத்தக் காட்சியில் பார்க்கலாம் என்று சொல்லும்போது, கதாநாயகி ரோசி கண் கலங்குகிறார்..!!


ஒரு வழியாக அனைவரும் அமர்ந்து சலனப்படத்தை பார்க்கும்போது, ரோசிப் பெண் நாயர்குலப் பெண்ணாக நடித்த காட்சிகள் வருபோது சினிமா கொட்டகையில் களேபரம் ஆரம்பமாகிறது. ஜமீன்தார்கள், மிராசுதாரர்கள், நாயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் சினிமாக் கொட்டகையை அடித்து நொறுக்குகிறார்கள். கதாநாயகியாக நடித்தப் பெண்மணி அலறி அடித்து ஓடுகிறார். தான் நடித்தப் படத்தைக் கூட பார்க்க முடியவில்லையே என்று கண்ணீர் சிந்தி அழுகிறார். கதாநாயகி தன்னுடைய தந்தையாருடன் வசிக்கும் வீட்டைத் தீவைத்து கொளுத்துகிறார்கள். ஊரை விட்டே அந்தக் குடும்பம் சென்றுவிடுகிறது. திரைப்படம் பார்ப்பவர்களின் இதயத்தையே உருக்கிவிடும் காட்சிகள்..!!


அதன்பிறகு ஜே.சி.டேனியல் சோகமாக வீட்டில் அமர்ந்திருக்கும்போது, அவருடைய சிறுவயது மகன்ஆத்திரத்தில் படத்தின் பிலிம் ரோலை தீயிட்டுக் கொளுத்துகிறார். நெஞ்சை உருக்கவைக்கும் காட்சி..!! பின்னர் தன்னுடைய இயல்பான வாழ்க்கையைத் தொடக்கி டேனியல் பல் மருத்துவம் பார்க்கிறார். 
தமிழகத்தின் புகழ்பெற்ற நடிகரான பி.யூ.சின்னப்பாவை தற்செயலாக சந்திக்கிறார். J.C.டேனியல் திரும்பவும் படம் எடுப்பதற்கான ஆசையைத் தூண்டிவிடுகிறார். J.C.டேனியல் மதராசப்பட்டினம் வந்து மீண்டும் படம் எடுத்து, சொத்துக்கள் அத்தனையையும் இழக்கிறார். ஒரு சினிமா பத்திரிகையில் பணியாற்றும் எழுத்தாளர், J.C.டேனியலை சந்திக்க வரும்பொழுது தன்னுடைய சோகமான, பரிதாபகரமான முடிவைக் கூறுகிறார். ஏப்ரல் 25, 1975 அன்று ஜே.சி.டேனியல் நோய்வாய்ப்பட்டு மரணமடைகிறார்..! 

1930 ம் ஆண்டில் வெளியான படத்தில் வரும் ஒரு காட்சி ..!
2000 ம் வருடத்தில் திரைப்பட விழா கேரளாவில் நடக்கிறது. ஜே.சி.டேனியலின் புதல்வர் விழாவில் கலந்து கொண்டு தன்னுடைய தந்தையாரின் கடுமையான போராட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுகிறார். தான் அந்த சிறுவயதில் உணர்ச்சிவசப்பட்டு, ஆத்திரப்பட்டு, தந்தையார் எடுத்த அந்த முதல் படத்தின் பிலிம் ரோலை தீயிலிட்டுக் கொளுத்திவிட்டேன். இதன் மூலம் கேரளா சினிமா உலகிற்கு மிகப்பெரிய வரலாற்றுப் பிழையைத் தேடிக்கொடுத்துவிட்டேன். நான் செய்த தவறுக்கு, நானே முழுப்பொறுப்பு..! அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள் என்று கண்ணீர் மல்க பேசுகிறார். இந்தக் காட்சி உணர்ச்சிகரமாக இருந்தது. 

J.C.டேனியல் 
ஆக ஒரு மாபெரும் கனவுலகவாதியான J.C.டேனியலின் வாழ்க்கை என்னுள் சோகத்தை ஏற்படுத்தவில்லை. எவரொவரும் செய்ய ஆரம்பிக்காத ஒரு விஷயத்தை, நாம் செய்ய முயலும்போது, மதி நுட்பத்துடன் செய்யும் பட்சத்தில், பலத்த எதிர்ப்புகள் இருக்கும் பட்சத்தில், வெற்றிகரமாக செயலை முடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது. இதே போன்று தமிழ்த்திரை உலகிலும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்கள் எடுக்கப்பட வேண்டும். ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் பாரதி, பெரியார் போன்றோரின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்த இயக்குநர் ஞானராஜசேகரன் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லியாக வேண்டும். இவருடைய "சீனிவாச ராமனுஜம்" வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியாகும் நாளை எதிர்நோக்கி வெகு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்..!!

ரா.செந்தில்குமார்...

Tuesday, April 22, 2014

மரங்களின் தோழன் (நிழல் அமைப்பு) அமைப்பின் நிறுவனர் ஷோபா மேனனின் மகத்தான சுற்றுச்சூழல் சேவைக்கு வாழ்த்துக்கள்!!

ஊருக்குள் உயிர் பெரும் குறுங்காடுகள்...

பூமி வானை நோக்கி எழுதும் கவிதைகள் மரங்கள் என்கிறது கலீல் கிப்ரானின் கவிதை. அந்தப் பசுங்கவிதைகளை ரசித்துப் பாதுகாக்கும் வேலையைப் பத்து ஆண்டுகளாகச் செய்து வருகிறது (மரங்களின் தோழன்) நிழல் அமைப்பு. 

மரங்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, சத்தமில்லாமல் சில மாற்றங்களை விதைத்திருக்கிறது. சென்னையின் பல பகுதிகளில், மக்கள் பங்கேற்புடன் சமூகப் பூங்காக்களை அமைத்திருப்பதை நிழலின் முக்கியப் பணி என்கிறார் நிழல் அமைப்பின் நிறுவனர் ஷோபா மேனன்.

ஷோபா மேனன் 
நாற்பது ஆண்டுகளுக்கு முன் மரங்களால் பசுமை போர்த்தப்பட்டிருந்த சென்னை, தொடர்ச்சியான நகர்மயமாக்கம் காரணமாக மரங்களை இழந்து, இன்றைக்கு கான்கிரீட் காடாக மாறிவிட்டது. நம் மண்ணின் மரங்களைப் பற்றிய அறிவும் ஆர்வமும் இளைய தலைமுறையிடம் காணாமல் போய்விட்டது. இந்தப் பின்னணியில்தான் சென்னையில் செயல்படும் நிழல் அமைப்பின் முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த அமைப்பின் சேவையால் மரக்கன்றுகளை நாட்டுப் பராமரிப்பதன் அவசியத்தை, சென்னை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

கோட்டூர் மரப்பூங்கா ...


நிழல் அமைப்பின் முதல் வெற்றிகரமான முயற்சி சென்னை கோட்டூர்புரம் மரப்பூங்கா. 2006 - ல் இந்த இடத்தை நிழல் அமைப்பிடம் பொதுப்பணித்துறை ஒப்படைத்தபோது குப்பை மேடாகத்தான் இருந்தது. ஆனால், தற்போது இந்தப் பூங்கா சென்னை மாநகரத்தின் நடுவில் 500 மரங்களுடன் ஒரு சின்ன காடு போலிருக்கிறது. ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவை மான்களில் ஆரம்பித்துப் பட்டாம்பூச்சிகள் வரை பல உயிரினங்களுக்குப் பிடித்திருக்கிறது. "பிரேம்னா, பட்டாம்பூச்சிகளுக்கு பிடித்த மரம். அந்த மரங்களை நட்டிருப்பதால், இங்கே பட்டாம்பூச்சிகளை அதிகமாகப் பார்க்க முடியும்" என்கிறார் ஷோபா மேனன்...

உலகப் புவி நாள்  - ஏப்ரல் 22


தூக்கணாங்குருவி கூடுகட்டும் கருவேல மரம், பறவைகளுக்குப் பிடித்த நெய்கொட்டான் மரம் என்று பல்லுயிர்களும் விரும்பும் இடமாக இருக்கிறது, கோட்டூர்புரம் மரப்பூங்கா. இப்படிச் சமூகப் பங்கேற்பை ஒரு செயல்பாட்டில் உறுதிப்படுத்துவதின் மூலம் குப்பை மேட்டைக்கூடக் குளிர்நிழல் பூங்காவாக்க முடியும் என்று காட்டியிருக்கிறது நிழல்...

கோட்டூர்புரம் மரப்பூங்காவை மாதிரியாகக் கொண்டு சென்னையில் மக்களுடன் இணைந்து பல இடங்களில் புதிய சமூகப் பூங்காக்களை நிழல் அமைப்பு அமைத்திருக்கிறது. வேளச்சேரி, சிட்லப்பாக்கம், மாதாவரம், நீலாங்கரை, அசோ நகர் போன்ற பகுதிகளில் சமூகப் பூங்காக்களை அமைத்திருக்கிறோம். பூங்காக்களில் மக்களே மரங்களைப் பராமரிப்பதாலும் சென்னை மாநகராட்சியின் ஆதரவாலும் நகர்ப்புறப் பல்லுயிரயத்தை உருவாக்க முடிந்திருக்கிறது என்கிற போது, இவருடைய மகத்தான சேவையைப் பார்த்து சிலிர்ப்பு ஏற்படுகிறது.

நாம் அனைவரும் மரம் வளர்ப்போம்..! மழை வளம் பெறுவோம்..!!


ஷோபா மேனன் அவர்களே..!! சுற்றுச்சூழலுக்கு சேவை புரிந்ததற்காக மத்திய அரசின் விருதுகளை வாங்கிகொண்டு, இந்தியாவிலேயே நான் ஒருவன் மட்டும்தான் பசுமைப் போராளி, சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக நான்
ஒருவன் மட்டும்தான் குரல் கொடுக்கிறேன். மற்றவர்களெல்லாம் சுய விளம்பரங்களைத் தேடிக்கொள்வதற்காக சேவை செய்வதுபோல் நடிக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டுத் திரியாமல், மகத்தான சேவை புரியும் ஷோபா மேனன் அவர்களுக்கு, ஆப்பிரிக்காவின் வங்காரி மார்த்தாவைப் போன்று அமைதிக்கான நோபல் பரிசு உங்களைத் தேடிவரும். அந்த நோபல் பரிசு உங்களுக்குக் கிடைப்பதின் மூலம் நோபல் பரிசு தனக்கான தகுதியை பெற்றுக்கொள்ளும். இந்த 21 ம் நூற்றாண்டில் உங்களுடைய சேவை மேன்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்..!!

Friday, April 18, 2014

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் சமூக வலைதளங்கள்

கணிப்பொறித்துறையின் சில்வர் ஜுபிலி (1988-2013) விழா மலரில் எனது கட்டுரையை தேர்வு செய்து முதல் பக்கத்தில் வெளியிட்ட, எனது இதயத்தில் என்றும் வாழும் அருமைப் பேராசிரியர் Dr.K.அருணேஷ் அவர்களுக்கு, இந்த வலைப்பூவின் மூலம் இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கட்டுரையை வலைப்பூவின் வாசகர்களுக்கு இங்கே பிரசுரம் செய்கிறேன்...

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் சமூக வலைதளங்கள்...

21 ம் நூற்றாண்டில் தகவல் தொழில் நுட்ப யுகம் உலகையே உள்ளங்கைக்குள் கொண்டு வந்து விட்டது. தகவல் தொழில்நுட்ப யுகத்தில் சமூக வலைதளங்களின் பங்கு அளப்பரியது. உலகெங்கிலும் உள்ள கோடான கோடி மக்களை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய ஊடகமாக செயல்படுகிறது. முகநூல், டுவிட்டர், வலைப்பூ, யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள், இணையதளங்களின் மூலம் ஏராளமான பங்களிப்பை செய்கின்றன. பத்துவருடங்களுக்கு முன்பு இணையதள பயன்பாடு என்பது இப்போது -ள்ளதைப் போன்று அதிகமாகக் கிடையாது. நவீன வசதிகளைக் கொண்ட அலைபேசியில் இணையதள பயன்பாடு அதிகரித்த பிறகு சமூக வலைதளங்கள் பிரபலமடையத் தொடங்கின. இதன் மூலம் முகம் தெரியாத நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும் பட்சத்தில் ஏராளமான பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. மின்னஞ்சல் மூலம் எளிதாக தொடர்பு கொள்ள முடிகிறது. புகைப்படங்கள், வீடியோ காணொளிகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதன் மூலம், உலகெங்கிலும் உள்ள அவரவர் நண்பர்களும், மற்றவர்களும் பார்ப்பதற்கு எளிதாக அமைகிறது.

தொழில்நுட்பங்கள் பெருகப் பெருக சாதகமான விசயங்களும், பாதகமான விசயங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. சமூக வலைதளங்களை நன்கு சாதகமான முறையில் பயன்படும் வகையில் உபயோகிப்பதில்தான் வெற்றியே அடங்கியிருக்கிறது. முன்பெல்லாம் நம்முடைய எண்ணங்கள், கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு வலிமையான ஊடகங்கள் கிடையாது. இன்றைக்கு இலட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களுடைய பார்வையில் சமூகம் குறித்தும், தேசம் குறித்தும், அரசியல் பற்றியும் ஏராளமான கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள். இன்றைய தேசத்தின் பிரச்சினைகள், சமூகத்தில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகளின் சாராம்சம் பற்றிய கருத்துக்களை சமூக வலைதளங்களில் ஏராளமாகப் பார்க்க முடிகிறது. அதே சமயத்தில் தேசத்திற்கு பிரச்சினை ஏற்படுத்தக்கூடிய விசயங்களும் நடைபெறத்தான் செய்கிறது.

கடந்த 2012 ம் வருடத்தில் எகிப்து நாட்டில் முகநூலின் மூலம் இளைஞர்கள் தங்களுடைய கருத்துக்களை பரிமாற்றம் செய்து, தேசத்தில் புரட்சியை ஏற்படுத்தினார்கள். இந்தியாவில் உள்ள இலட்சக்கணக்கான இளைஞர்கள் வலைப்பூவின் மூலம் தங்களைச் சுற்றியுள்ள இடங்களின் கலாச்சாரத்தை பதிவு செய்து, உலகமறியச் செய்கிறார்கள். தங்கள் வாழ்வில் நடந்த இனிமையான, துன்பமான நிகழ்வுகளை வெளிப்படுத்துவதின் மூலம் அன்றைய சமூக நிலைமையை மற்றவர்களும் அறிந்து கொள்ள ஏதுவாக அமைகிறது. எந்த அளவிற்கு அற்புதமான விஷயங்களை சமூகவலை தளங்களில் பரிமாறிக்கொள்ளமுடியுமோ, அந்த அளவிற்கு மனதைப் பாழாக்கக்கூடிய விஷயங்களையும் பரிமாறிக் கொள்ள முடியும். இவற்றையெல்லாம் கடந்து அடுத்த 25 வருடங்களில் உலகத்தின் வரலாற்றையே மாற்றியமைக்கக்கூடிய சக்தியாக சமூக வலைதளங்களின் பங்களிப்பு இருக்கும்.