Saturday, September 9, 2023

நேர்காணல்.. பேராசிரியர் ராஜேஸ்வரி அவர்கள்..

கோவை நகரின் விமான நிலையம் அருகிலுள்ள புகழ்பெற்ற பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறையில் இருபத்தி நான்கு(24) ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்து ஒய்வு பெற்றவர் பேராசிரியர் ராஜேஸ்வரி அவர்கள். 2005ம் ஆண்டு நவம்பரில் பேராசிரியர் ராஜேஸ்வரி அவர்கள் நடத்தும் மேன்ஷனில் குடிவந்த பிறகு இலக்கியம், வரலாறு, சமூகம், சினிமா குறித்து நிறைய பேசி விவாதம் செய்தமையால் வலைப்பூவிற்கு கிராமங்களின் முன்னேற்றம் குறித்து பேச வேண்டும் என கேட்டபோது பத்து நிமிடங்கள் அருமையான நேர்காணலை பேசினார். 2012ம் ஆண்டு டிசம்பரில் பேராசிரியரின் இல்லத்தில் நேர்காணல் செய்தது. நான் பிறந்த ஊரில் எனது பக்கத்து வீட்டு பெரியப்பா நாராயணசாமி அவர்கள்.. பூ.சா.கோ கல்லூரியின் முதல்வராக பணிபுரியும் காலகட்டத்தில் ராஜேஸ்வரி அவர்கள் பேராசிரியராக பணியில் இணைந்த காலகட்டம் என்பதால்.. பிரபஞ்சத்தின் சக்தி இந்த நேர்காணலில் ஒரு பூமத்திய ரேகையில் இணைத்தது.


2013ம் ஆண்டு பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முனைவர் பட்டம் வாங்கியிருந்தார். ஆங்கிலத்தில் சிறப்பாக பேசும் பேராசிரியர் அவர்கள்.. தமிழில் சிறப்பாக பேசியது பிரமிக்கச் செய்தது. நேர்காணல் செய்யும்போது இலக்கியத் தமிழில் பேசுவதை முதல் முறையாக கேட்டது. துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணா அவதாரத்தின் தொடர்ச்சியாக திருநெல்வேலி ஜில்லாவிலிருந்து உதயமாகும் கல்கி அவதாரம் குறித்து ராமாயணம், மஹாபாரதம் கதைகளுடன் நிறைய பேசியதுண்டு. 

மதுபானம் எனும் அரக்கன்.. சமூகத்தின் இளைய தலைமுறைகளை கலாச்சாரம், பண்பாட்டு தளத்தில் அழித்துக் கொண்டு வரும் கொடுமையான சூழ்நிலை.. இவற்றினை வேருடன் களைந்தெறியும் அக்கினி வேள்வி..

பிறந்த மண்ணை இளைய தலைமுறையினர் அதிகம் விரும்ப வேண்டும் எனும் லட்சியமுடன் வலைப்பூ உருவாக்கம் என்ற இரண்டு முக்கியமான கேள்விகளை ராஜேஸ்வரி அவர்களிடம் கேட்டபோது.. அற்புதமான பதிலைச் சொல்லி பிரமிக்கச் செய்தார்.

Thursday, September 7, 2023

வாஞ்சி மணியாச்சி ரயில்வே ஸ்டேஷன்.. டைம் லூப் ஆக்ஸன் திரில்லர்..

வீரபாண்டிய கட்டபொம்மன் வீரமரணம் எய்த இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு 1999ம் ஆண்டு கோடை விடுமுறையில், மே மாதம்.. தூத்துக்குடி மாவட்டம், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அருகிலுள்ள கொல்லங்கிணறு ஊரில் அமைந்த எனது குலதெய்வமான ஸ்ரீநாரணம்மாள் சமேத ஐயப்பசுவாமி கோவிலின் திருவிழாவிற்கு அப்பா, பாட்டி ஆதியம்மாள், அம்மாவுடன் வருகை தந்தபோது கம்மகுல மக்களில் நிறைய பேர் பஸ்ஸில் வந்தார்கள். சில குடும்ப மக்கள் அவர்களுடைய ஊரிலிருந்து கோவில்பட்டி நகரின் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து ரயிலேறி வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் வந்து அங்கிருந்து ஆட்டோவிலோ, காரிலோ ஏறி வாடகை கொடுத்து அப்பாடா.. எனச் சொல்லி கொல்லங்கிணறு ஊருக்கு வந்ததை கண்டது. புதிய நூற்றாண்டு பிறந்து பத்து, இருபது ஆண்டுகள் கடந்துபோன பிறகு கோவில் திருவிழாவிற்கு கம்மகுல மக்கள் வந்த பிறகு கண்டால்.. நூற்றுக்கும் மேற்பட்ட கார்களை பார்க்க முடிகிறது. கோவை நகரில் 2009ம் ஆண்டு செப்டம்பரில் வாங்கிய டூவீலரிலே பயணமாக.. 2022ம் ஆண்டு ஜூன் 6 திங்களன்று நடந்த கோவில் திருவிழாவிற்கு நடுப்பகல் சூரிய வெளிச்சத்தில் கொல்லங்கிணறு ஊருக்கு விஜயமானது. 

ஒரு வருடம் முன்பாக, 2021ம் ஆண்டு.. விடுதலை வீரன் வாஞ்சிநாதனின் நினைவு தினமன்று வாஞ்சி மணியாச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு விஜயாமாகி குலதெய்வம் கோவிலுக்கும் செல்லலாம் என பயணத்திற்கு ஆயத்தமானபோது.. சொந்த வேலைகள் வந்து ஒரு வாரம் பின்பு செல்லலாம் என மனதை தேற்றி.. ஜூன் 28 திங்களன்று காலை வேளை வீட்டிலிருந்து டூவீலரில் கிளம்பி கோவில்பட்டி நகருக்கு வந்து குருமலை செல்லும் சாலை வழியே பயணமாக நடுப்பகல் சூரிய வெளிச்சத்தில் கொல்லங்கிணறு ஊருக்கு வந்த வேளை.. ஸ்ரீநாரணம்மாள் சமேத ஐயப்பசாமி கோவில் மூடியிருந்தது. வாசலில் இருந்தவாறே நாரணம்மாளை தரிசனம் செய்து, கோவிலுக்கு நேராக காட்டுப் பாதையில் செல்லும் சாலையில் வாஞ்சி மணியாச்சி ரயில்வே ஸ்டேஷனை நோக்கிச் செல்கையில்..   

வாஞ்சி மணியாச்சி 0.4 கிலோ மீட்டர் எனும் மைற்கல்லை கண்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு கோவிலுக்கு வந்தபோது டூவீலரில் வராததால்.. இந்த மைற்கல்லை பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை. மொபைலில் புகைப்படம் எடுத்தது. பின்னர் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் வந்து பால்ய கால நண்பர்களை சந்தித்து பேசி மகிழ்ந்தது. ஒரு நாள் புரட்சியின் மூலம் பிரிட்டீஷ் அரசாங்கத்தை திடுக்கிடச் செய்த வாஞ்சிநாதனின் வீரமுடன், ஆன்மா வாழும் ரயில்வே ஸ்டேஷன் என்பதால்.. புவியீர்ப்பு விசைபோல மனதை காந்தமென ஈர்த்து ஸ்டேஷனில் மணிக்கணக்கில் அமர்ந்து வரலாற்றின் நிகழ்வுகளை பின்னோக்கி காணச் செய்து மனதில் நினைவாகச் சுழன்றது. 

வெங்கட் பிரபு இயக்கத்தில் டைம் லூப் ஆக்ஸன் திரில்லர் படமாக சிம்பு நடித்த "மாநாடு" படம் இந்த 2021ம் ஆண்டின் நவம்பர் 25 அன்று ரிலீசாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. மாநாடு படம் 2019ம் ஆண்டு அக்டோபர் 10 வியாழன்று தொடங்கி டைம் லூப் ஆக்ஸன் திரில்லராக ஓடி ஓடி மறுதினம் அக்டோபர் 11 வெள்ளியன்று சர்பிரைஸாக முடிகிறது. 

இவ்வேளை.. 2021ம் ஆண்டின் அக்டோபர் 10 ஞாயிறன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மெட்ராஸ் சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல் அணிகள் விளையாடிய ஐபிஎல் போட்டியில்.. அன்ரிச் நோர்ட்ஜெ(Anrich Nortje) வீசிய 0.4 ஓவரின் பந்தில் மெட்ராஸ் சூப்பர் கிங்ஸ் ஓபனிங் பேட்ஸ்மேன் பாப் டூ பிளெஸ்ஸிஸ்(Faf Du Plessis) கிளீன் போல்டாகி ஒரு ரன்னுடன் பெவிலியன் திரும்பினார். ஆக.. இந்த ஐபிஎல் போட்டியின் 0.4 ஓவரின் பந்து டைம் லூப்பாக வாஞ்சி மணியாச்சி 0.4 கி.மீ மைற்கல்லுடன் இணைந்ததை கண்டு பிரமிக்கச் செய்தது. 

குறிப்பு: வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையின் நினைவு தினமன்று (நவம்பர் 16) பிறந்தவர்.. டெல்லி கேபிடல் ஐபிஎல் அணி பாஸ்ட் பவுலர் அன்ரிச் நோர்ட்ஜெ.. 

ஓம் நமசிவாய..

Wednesday, September 6, 2023

கொல்லங்கிணறு நாரணம்மாள் கோவில் திருவிழா..

தூத்துக்குடி மாவட்டம், வாஞ்சி மணியாச்சி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 2.4 கிலோ மீட்டர் காட்டு வழிச் சாலை வழியாக பயணம் செய்து வந்தால் திருநெல்வேலி நகருக்குச் செல்லும் சாலையில் அமைந்த கொல்லங்கிணறு ஊரில் எனது குடும்பத்தின் குலதெய்வமான ஸ்ரீஐயப்பன் சமேத நாரணம்மாள் கோவில். கானப்பாடி கம்ம குலத்தினர் வழிபாடு செய்யும் குலதெய்வம் கோவில். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். இரண்டு தினங்கள் நடைபெறும் திருவிழாவில் பக்தர்களுக்கு மூன்று வேளை உணவு அன்னதானமாக அளிக்கப்படும். ஊரிலுள்ள பிற கம்மகுல மக்களும் அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு செய்வார்கள்.  

கடந்த ஆண்டு ஜூன் 6 திங்களன்று.. மாலை வேளை திருவிழா தொடங்கியது. ஊரிலிருந்து புறப்பட்டு எனது இரு சக்கர வாகனத்தில் பயணமாக கோவில்பட்டி நகருக்கு வந்து குருமலை சாலை வழியாக நடுப்பகல் சூரிய வெளிச்சத்தில் கொல்லங்கிணறு ஊருக்கு வந்து சேர்ந்தேன். வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் செல்லும் சாலையில் அமைந்த உறவினர் இல்லத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு கிணற்றில் குளித்துவிட்டு வந்து கோவிலுக்குச் சென்று ஸ்ரீஐயப்பன் சமேத நாரணம்மாள் தெய்வத்தை தரிசனம் செய்து பரவசமானது.   

எனது இரு சக்கர வாகனத்தை நிறுத்துகையில்.. புதிதாக கட்டப்பட்ட உறவினர் வீட்டின் சுவற்றில் தியானம் செய்யும் புத்தரின் சிற்பம் பிரமிக்கச் செய்தது. உறவினர்கள் பெங்களூரில் தொழில் செய்கின்றனர். எனது உறவினர் முதுமை வயதில் வீட்டிலேயே ஒய்வு எடுக்கிறார். 

இரவு வேளை தொடங்கி.. ஸ்ரீஐயப்பன் சமேத நாரணம்மாள் தெய்வத்தின் பூர்வீக வரலாற்றினை பேசும் வில்லுப்பாட்டு நிகழ்வுடன், திருவிழாவில் கலந்து கொண்ட பெண்களின் கும்மிப் பாட்டு நிகழ்வு, இவை இரண்டும் ஒன்றாக அமைந்து இதை பார்க்கும் கம்மகுல பக்தர்களை பரவசம் அடையச் செய்ததை கண்டு மகிழ்ந்தது. 

ஓம் நமசிவாய..

Thursday, August 24, 2023

உலகம் சுற்றும் வாலிபன்..

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்த ஊர் கழுகுமலை. எனது ஊரான  குளக்கட்டாக்குறிச்சியிலிருந்து எட்டு கிமீ தூரம். கழுகுமலையிலிருந்து எனது ஊரின் வழியே செல்லும் பேருந்துகள் சிவகாசி நகரம் வரை செல்லும். இதனால், சிவகாசி மார்க்கம் சாலை என்பார்கள். பத்தாம் வகுப்பு வரை கோவில்பட்டி நகரில் நாடார் மேல்நிலை பள்ளியில் படிப்பை முடித்து, பதினொன்றாம் வகுப்பு கழுகுமலை அரசு மேல்நிலை பள்ளியில் கணித குரூப் எனும் வகுப்பில் சேர்ந்தபோது.. 1997ம் வருடம், ஜூலை மாதம். இதற்கு முன்பு, மே மாதம் ஐ.பி.எம் நிறுவனம் வடிவமைத்த டீப் ப்ளூ செஸ்(Deep Blue Chess Program) புரோகிராம் கணிப்பொறி உலக செஸ் சாம்பியன் கேரி காஸ்பரோவை வெற்றி வாகை சூடியிருந்தது.    

பதினொன்றாம் வகுப்பில் படிக்க ஊரிலிருந்து சைக்கிள் மிதித்து வந்தது. நண்பகல் உணவு சாப்பிட டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு சைக்கிள் மிதித்து நடுவூரணியில் அமைந்த சித்தி விநாயகர் கோவிலுக்கு வந்து நண்பர்களுடன் சாப்பிடுவது வழக்கமானது. எனது ஊரிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் செவலை மணி, காளிராஜ் உடன் இன்னும் இரண்டு பேர் வருவார்கள். அப்போதைய 1997ம் ஆண்டுகளில் அரச மரத்தடியில் சித்தி விநாயகர் கம்பீரமாக வீற்றிருப்பார். அருகில் அமைந்த எட்டு விநாயகர் கோவில் 1904ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதை கீழே அமைந்த படிக்கட்டில் 1904ம் ஆண்டு என கல்லிலே எழுதியதைக் கண்டு அறிந்தது. 

காளிராஜ் பாண்டியன் கழுகுமலை அரசு மேல்நிலை பள்ளியில் எனக்கு முன்பே படித்தவர். வெள்ளை உடை அணிந்து முறுக்கு மீசையுடன் கம்பீரமாக இருப்பார். எனது ஊரின் ரேஷன் கடையில் கடந்த இருபது ஆண்டுகளாக பணி செய்கிறார். 2018ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு ஸ்ரீசித்தி விநாயகர் கோவிலில் புனரமைப்பு வேலைகளை தனது சொந்த செலவில் செய்ததை "டைல்ஸ் உபயம்" என கல்வெட்டாக அமைந்து, காண்பதற்கு அழகுற காட்சி தந்தது. 

பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதச் செல்வதற்கு முன்பு சித்தி விநாயகரை, எட்டு விநாயகரை தரிசனம் செய்து சென்றால் பரீட்சை எழுதுகையில் படித்தவை அனைத்தும் ஞாபகம் வந்து எளிதாக எழுதிவிட முடியும். இதுபோலவே, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கையில் தேர்வு எழுதும் சமயங்களில் தரிசனம் செய்து சென்ற வேளை.. அனைத்தும் சிறப்பாக அமைந்தது. இந்த சேதியை எனது அன்புச் சகோதரியிடம் சொன்ன பிறகு சித்தி விநாயகர், எட்டு விநாயகரின் ஆன்மீகப் பேராற்றலை உணர்ந்து காலை, மாலை வேளைகளில் தரிசனம் செய்து மகிழ்ச்சி அடைவார். 

கடந்த ஆண்டு.. மேதகு அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினமன்று(அக்டோபர் 15).. சங்கரன்கோவில் ஊரிலிருந்து நெற்கட்டான் செவல் ஊருக்குச் செல்லும் சாலையில் அமைந்த வீரிருப்பு கிராமத்தில் அமைந்த உலக அமைதிக்கான புத்தரின் கோவிலில் அதிகாலை நான்கு மணிக்கு தொடங்கி நடக்கும் பிரார்த்தனையில் பங்கேற்க கழுகுமலை வழியே அதிகாலை டூவீலரில் வந்தபோது.. சித்தி விநாயகர் கோவிலில் தரிசனம் செய்து புறப்புடுகையில்.. 

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இயக்கி நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் ஜப்பான் நாட்டிலுள்ள காமகூரா புத்தர் கோவிலில் சயின்டிஸ்ட் முருகன்(எம்.ஜி.ஆர்) கண்டுபிடித்த அணுகுண்டு ஆராய்ச்சிக் குறிப்பினை அங்குள்ள புத்த துறவியிடம் கொடுத்து பத்திரமாக வைத்திருந்து தனது உடன் பிறந்த தம்பி ராஜு வந்து கேட்கும்போது மட்டுமே கொடுக்கும்படி சொல்லுவார். அணுகுண்டு ஆராய்ச்சிக் குறிப்பினை சயின்டிஸ்ட் முருகனிடம் வாங்கிய காமகூரா கோவிலின் புத்த துறவி அங்குள்ள ஒரு டைல்ஸினை தோண்டி எடுத்து பத்திரமாக வைப்பார். 2018ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா தினமன்று.. டைல்ஸ் உபயமான கல்வெட்டினை அப்துல் கலாமின் பிறந்த தினமன்று கண்டபோது, மேற்சொன்ன காமகூரா புத்தர் கோவிலின் நினைவுகள் மனதில் சுழன்றது. 

ஓம் நமசிவாய..

Tuesday, August 15, 2023

கோரக்கர் சித்தர் - கனகசபை

கோவை நகரிலிருந்து நகர்மண்டபம் வழியாக சிறுவாணி செல்லும் சாலையில் அமைந்த பேரூரில் பச்சைநாயகி அம்மன் சமேத பட்டீஸ்வரர் கோவில் பரமேஸ்வரனை தரிசனம் செய்யும் லட்சோப லட்சம் பக்தர்களை தன்னிடம் ஈர்த்து புகழ்பெற்ற சிவாலயமாக திகழ்கிறது. கோவிலுக்குச் செல்லும் நுழைவாயிலின் வலது புறமாக சிற்பக் கலையின் சிகரமாக திகழும் கனக சபையில் சிவகாமி சுந்தரி அம்மன் சமேத நடராஜர் சந்நிதி ஆன்மீகப் பேராற்றலின் மையமாக இருப்பதால் மேலைச் சிதம்பரம் என ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பக்தர்களால் அழைக்கப்பட்டு, சிதம்பரம் கோவிலில் வீற்றிருக்கும் நடராஜரை தரிசனம் செய்யும் பாக்கியத்தை பக்தர்களுக்கு தருவதை அகத்தில் காண முடிகிறது.


கனக சபையில் பன்றியுடன் பறக்கும் சித்தராக காட்சி தரும் கோரக்கர் சித்தரின் சிற்பத்தை தூணில் காணலாம். பச்சைநாயகி அம்மன் சந்நிதி பின்புறமாக முருகப்பெருமானின் சோமஸ்கந்த மூர்த்தியை பிரதிஷ்டை செய்த பெருமை கோரக்கர் சித்தருக்கு அமைகிறது. இங்கு கோரக்கர் தவம் செய்த இடத்தில் பீடம் அமைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து பெரும் தவப்பயனை அடைகின்றனர்.   

ஓம் நமசிவாய..

Wednesday, August 9, 2023

பொன்னியின் செல்வன் - இயக்குநர் மணிரத்னம்

"பொன்னியின் செல்வன்" எனும் வரலாற்றுப் புதினத்தை எழுதிய எழுத்தாளர் கல்யாண கிருஷ்ணமூர்த்தி அவர்கள், தனது பெயரை சுருக்கி கல்கி என வைத்துக் கொண்டார். ஸ்ரீமந் நாராயணின் பத்தாவது அவதாரம் எனச் சொல்லப்படும் "கல்கி அவதாரம்" பெயரினை திருமாலின் மீது கொண்ட பக்தியின் காரணமாக கல்கி என்ற புனை பெயருடன் கல்கி இதழில் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தை எழுதியதால் லட்சோப லட்சம் வாசகர்கள் கல்கி எனும் பெயரினை மந்திரச் சொல்லாக இன்று வரையிலும் பேசிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. 

இந்திய திரையுலகின் நட்சத்திர இயக்குநர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படம் ஏப்ரல் 28ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீசாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடியது. மாவீரன் நெப்போலியனின் நினைவு தினமான மே 5ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று.. கோவை புறநகரிலுள்ள காமாட்சிபுரம் ஊரில் அமைந்த SRK Miraj எஸ்.ஆர்.கே மிராஜ் சினிமாஸில் நண்பகல் காட்சிக்குச் சென்று பார்த்தது. படத்தின் சென்ஸார் தேதி ஏப்ரல் 11 என்பதைக் கண்டது.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படம், முதல் பாகத்தைவிட கலைநயமுடன் சிறப்பாக இருந்தது. முதல் பாகத்தில் ரஹ்மானின் மியூசிக் எங்கே கேட்கிறது என்று தேடியதுபோல இல்லாமல், இரண்டாம் பாகம் படத்தில் முழுமையான இசையை கேட்க முடிந்தது ஒரு ஆறுதல் என மட்டுமே சொல்லலாம். தெலுங்கு மொழியில் உருவாகி பல மொழிகளில் வெற்றிகரமாக ஓடிய பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி ஐயாபோல.. ரஹ்மான் இசையமைத்தார் என்று ஒப்புக் கொள்ள முடியாது. பாகுபலி படத்தின் மிகப்பெரிய பலமே பிரமிக்க வைக்கும் இசையமைப்பு என்பதை சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பேசியதை கேட்டதுண்டு.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பாட்ஷா படத்தின் வெள்ளி விழா நடந்த ஜூலை 14 அன்று, காமிக்ஸ் படம் வரையும் அம்புலிமாமா பையனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுவதை இயக்குநர் ஷங்கர்.. சங்கர் சிறந்த பொழுதுபோக்கு படம் என படம் பார்த்து பாராட்டிய பிறகு அறிய முடிந்தது. படத்தின் சென்ஷார் தேதி ஜூலை 10. இந்த ஜூலை 10 அன்று பம்பர் படத்தை கோவை சித்ரா விமான நிலையம் அருகிலுள்ள பிராட்வே சினிமாஸில் இரவுக் காட்சி பார்த்தபோது.. சென்ஷார் தேதி ஏப்ரல் 11 செவ்வாய்கிழமையாக இருந்ததை கண்டது. 

2023ம் ஆண்டில் ஏப்ரல் 11, ஜூலை 11 இரண்டு தினங்கள் மட்டுமே செவ்வாய்கிழமை. ஜூலை 11.. பிரிட்டீஷாரின் ஏஜெண்டான மருதநாயகம் படைகளை தீரமுடன் எதிர்த்துப் போராடிய மாவீரன் அழகுமுத்துகோனின் பிறந்த தினம். ஜூலை 18.. செவ்வாய்கிழமை, மாவீரன் அழகுமுத்துகோனின் நினைவு தினம். இப்படியாக, மாவீரன் அழகுமுத்துகோனின் நினைவு தினமன்று கேரளா மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி அவர்கள் சிவபதவி அடைந்ததை கண்டது. 

கேரளா மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற சபரிமலை கோவிலில் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய சென்ற தமிழ்நாட்டு இளைஞன் ஒருவன் இஸ்லாமிய பெரியவரிடம் வாங்கிய ஒரு லாட்டரியில் கோடி பணம் பம்பர் பரிசாக விழுவதை மையமாக கொண்டது பம்பர் படம். ஆக, பொன்னியின் செல்வன் 2ம் பாகமும், பம்பர் படமும் தொப்புள்கொடி உறவுபோல இணைந்த கைகளாக இருப்பதைக் கண்டு பிரமிப்பூட்டியது.

Monday, August 7, 2023

பிரம்மஸ்ரீ சிவராஜ யோகி சுவாமிகள் ஜீவசமாதி - கரிவலம்வந்தநல்லூர்

தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் ஊரில் சங்கரநாராயண சுவாமி கோவிலின் பின்புறம் ஸ்ரீவேலப்ப தேசிகரின் ஜீவசமாதி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரிவதுபோல.. சங்கரன்கோவில் ஊரிலிருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் அமைந்த ஊர் கரிவலம்வந்தநல்லூர். இந்த ஊரில் சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்கினி ஸ்தலமாக விளங்கும் பால்வண்ணநாதரின் கோவிலின் பின்புறம் பிரம்மஸ்ரீ சிவராஜ யோகி சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்து தன்னை நாடி வரும் பக்தர்களின் குடும்பத்தினருக்கு சிறந்த நண்பனாக இருக்கிறார்.  

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 வியாழன்று.. நடுப்பகல் சூரிய வெளிச்சத்தில் பிரம்மஸ்ரீ சிவராஜ யோகி சுவாமிகளின் ஜீவசமாதிக்கு விஜயமானபோது.. ஜீவசமாதி 1945ம் ஆண்டு, பிப்ரவரி 5, மாசி மகம் என்பதை ஜீவசமாதி நுழைவாயிலில் கண்டது. 

1945ம் வருடம் என்பதை கண்ட பிறகு.. கோவை அவிநாசி சாலையிலுள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி 1945ம் ஆண்டு ஜி.டி.நாயுடு என அழைக்கப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு அவர்களால் தொடங்கப்பட்ட வரலாறு மனதில் ஞாபகமாக சுழன்றது. 2006ம் ஆண்டு தொடங்கி ஏழு ஆண்டுகள்.. 2013ம் வருடம் வரை, இந்த கல்லூரி மைதானத்தில் காலை வேளை ஓடுதல், ஊஞ்சலில் தொங்கி விளையாடுதல் என உடற்பயிற்சி செய்தமையால் எனது வாழ்வுடன் இரண்டறக் கலந்த கல்லூரியாக இருந்தமையால், 1945ம் ஆண்டு என்பது மின்னலென ஞாபகம் வந்தது. 

கோவை மாவட்டத்திலுள்ள சூலூர் எனும் பெரிய ஊரின் அருகிலுள்ள கலங்கல் என்ற சிறிய கிராமத்தில் விடுதலை வீரன் பகத்சிங் பிறந்த நாளன்று பிறந்து ஆங்கிலேய அதிகாரி ராபர்ட் ஸ்டேன்ஸூடன் டூவீலர் வண்டியில் கோவை நகரம் வந்த கோபால்சாமி துரைசாமி நாயுடு அவர்கள் பஞ்சாலையை நடத்தும் அதிபராக உயர்ந்து அறிவியலில், விவசாயத்தில் எண்ணற்ற கண்டுபிடுப்புகளை செய்து கோவை நகரம் ஒரு பெரிய தொழில் நகரமாக வளர்வதற்கு கிரியா ஊக்கியாக இருந்தவர் என்பதால், கோபால்சாமி துரைசாமி நாயுடு சரித்திரத்தில் இடம் பெற்றார். 


"இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படத்தை சென்னை நகரின் விருகம்பாக்கம் ஐநாக்ஸ் சினிமாஸில் டிசம்பர் 11 அன்று பார்த்த பிறகு எனது உடன்பிறந்த தம்பி என்று நான் அழைக்கும் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய கபாலி படம் ரிலீசான தினமன்று(ஜூலை 22).. கொடிசியா வளாகத்தில் நடைபெறும் ஏழாம் ஆண்டு புத்தக கண்காட்சிக்கு விஜயமாக வருகை தந்த நடுப்பகல் சூரிய வெளிச்சத்தில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி நுழைவாயிலை புகைப்படம் எடுத்தது. அன்றைய தினம்.. பிரம்மஸ்ரீ சிவராஜ யோகி சுவாமிகளின் ஜீவசமாதிக்கு விஜயமான நாளன்று, 2020ம் ஆண்டு சென்னை நகரின் திருவான்மியூர் அருகிலுள்ள பெசன்ட் நகர் கடற்கரைக்குச் சென்ற ஜனவரி நான்காம் தேதி ஞாபகமான வேளை.. கோபால்சாமி துரைசாமி நாயுடு அவர்கள் சிவபெருமானுடன் இரண்டறக் கலந்த 1974ம் ஆண்டு, ஜனவரி நான்காம் தேதி ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தினம் என்பதை அகத்தில் கண்டு மகிழ்ந்தது.

Sunday, August 6, 2023

ஸ்ரீநரசிம்மா அவதாரம் - பேரூர் பட்டீஸ்வரர் கோவில்

கோவை புறநகரின் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்த பேரூர் பச்சைநாயகி அம்மன் சமேத பட்டீஸ்வரர் கோவில். இந்தக் கோவிலின் பச்சைநாயகி அம்மன் சந்நிதி வலது புறமாக கஞ்சி வரதராஜ பெருமாள் அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் வரதராஜ பெருமாளின் ஆன்மீகப் பேராற்றலை இங்கு அருள்புரியும் வரதராஜ பெருமாளிடம் தரிசனம் செய்கையில் பெறுவதை அகத்தில் உணர முடியும். தீமைகளை அழித்து தர்மத்தை நிலைநாட்ட யுகங்கள் தோறும் அவதரிக்கின்ற அவதார புருஷன். வரதராஜ பெருமாளின் சந்நிதி முன்பாக ஸ்ரீமந் நாராயணனின் பத்து அவதாரங்களை குறிக்கும் வண்ண ஓவிய படங்கள் கண்ணாடி பேழைகளில் வைக்கப்பட்டு இதைக் காணும் பக்தர்களை பரவசம் கொள்ளச் செய்கிறது. மினர்வா கிளாஸ் ஹவுஸ் எனும் கடை வைத்துள்ள ஸ்ரீமந் நாராயணின் பக்தர் இந்த ஓவிய படங்களை செய்து கோவிலுக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளதை கண்ணாடி பேழையில் பார்க்க முடிகிறது. 

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நூறாவது தடைவையாக பேரூர் பட்டீஸ்வரரை தரிசனம் செய்ய வருகையில்.. காஞ்சி வரதராஜ பெருமாளின் முன்பு ஓவியத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீநரசிம்மா அவதாரம், கோவை நகரின் அவிநாசி சாலையிலுள்ள ஸ்ரீவரதராஜ மில்ஸின் எதிர்புறமுள்ள சக்தி கிளாஸ் அன்ட் பிளைவுட்ஸ் கடையின் முன்புறமுள்ள மேம்பால தூணுடன் தொப்புள் கொடி உறவாக இணைத்துள்ளதை கண்டு பிரமிப்பூட்டியது. ஆக, ஸ்ரீநரசிம்மா அவதாரம் இந்த ஆண்டின் ஜூன் 03, ஜூன் 04 சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவதார மூர்த்தியாக தூணை பிளந்து கொண்டு அவதரித்து அசுர குணம் படைத்த ஹிரண்யகசிபுவின் குடலை உருவி தனது புஜத்தில் மாலையாக போட்டுக் கொண்டு ஏழு கண்டங்களும் குலுங்கும்படியாக சிம்ம கர்ஜணை புரிந்ததை அகத்தில் காண முடிந்தது. 

ஓம் நமோ நாராயணா.. ஓம் நமோ நாராயணா..

Saturday, August 5, 2023

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் - ஸ்ரீநரசிம்மா அவதாரம் - மார்ச் 10 - வெள்ளிக்கிழமை

கோவை புறநகரின் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள பேரூர் பச்சைநாயகி அம்மன் சமேத பட்டீஸ்வரர் கோவில் "மேலைச் சிதம்பரம்" என பக்தர்களால் அழைக்கப்படும் அகில இந்திய அளவில் புகழ் பெற்ற கோவிலாகும். மகாத்மா காந்தி, ஜெயபிரகாஷ் நாராயணன், காமராஜர் போன்ற அரசியல் பெருந்தலைவர்களின் அஸ்தி வைத்து கட்டப்பட்ட கல்லறை நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் எந்த அளவிற்குச் சிறப்பு வாய்ந்தது என்பதை நமக்குச் சொல்கிறது. 

இந்த ஆண்டின் மார்ச் 10, வெள்ளிக்கிழமை.. மாலை வேளை.. ஆர்ப்பரிக்கும் அட்லாண்டிக் கடலுக்குள் புதைந்துபோன அல்கொய்தா இயக்கத் தலைவன் ஒஸாமா பின்லேடனின் பிறந்த தினம்.  கோவை நகர்மண்டபம் பஸ் நிலையமிருந்து பேரூர் செல்லும் பஸ்ஸில் ஏறியபோது நண்பர் ரவிகாந்தனும் ஏறிய பின்பு இவரைக் காண ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்த மகிழ்ச்சி உண்டானது. முத்துவீரப்பன் எனும் கேரக்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த வீரா படத்தில் நகைச்சுவை நடிகர் செந்திலின் பெயர் ரவிகாந்தன் என்பதை நண்பரிடம் ஞாபகப்படுத்தி சொன்னபோது.. ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜுனர் போல.. நரன், நரேன் எனும் நரநாராயணர்கள் எனபதுபோல, நம்முடைய நட்பு காலம் கடந்தும் உயிருள்ளதாக இருப்பதைச் சொல்லி பேசிக் கொண்டது. 

சூப்பர் ஸ்டார் ரஜினி போலவே முகத்தோற்றம், அவரைப் போன்று கருப்பு நிறம் முகமுடன் காட்சி தரும் சூர்யகாந்தனை "ரவிகாந்தன்" என்றே அழைப்பேன். சத்தியமங்கலம் ஊரிலுள்ள ஸ்ரீபாரியூர் அம்மன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிலரங்கு நடத்துவதற்கு ஒன்றாகச் சென்ற நாட்களின் நினைவுகளை நண்பர் ரவிகாந்தனிடம் சொன்னபோது.. கே.பாலச்சந்தர் இயக்கிய "உன்னால் முடியும் தம்பி" படம் ரிலீசான 1988ம் ஆண்டில் ஆகஸ்டு 12, பிப்ரவரி 12 இரண்டு நாட்களுமே வெள்ளிக்கிழமை என்பதுபோல..  

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்ரீபாரியூர் அம்மன் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற பிப்ரவரி 12 புதன்கிழமை என்பதுடன், இந்த ஆண்டின் பிப்ரவரி 12 ஞாயிறாக அமைந்து மகாகவி பாரதி எழுதிய புதிய ஆத்திச்சூடிபோல "ஞாயிறு போற்று" என்பதாக அமைந்ததை சொல்ல.. மகிழ்ச்சி என்றார். 

நண்பர் சூரியகாந்தன் எனும் ரவிகாந்தன் செல்வபுரத்தில் இறங்கி கொண்டார். பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு விஜயமான வேளை.. நுழைவாயிலில் நந்தி அருகிலுள்ள வலதுபுறம் தூணில் ஹிரண்யகசிபுவை வதம் செய்யும் நரசிம்மா அவதார சிற்பத்தினை நூறாவது தடவையாக பார்க்கும் பாக்கியம் அமைந்து.. ஹிரண்யகசிபுவின் மகன் பக்த பிரகலாதனை போன்று "ஓம்.. நமோ நாராயணா" என்ற மந்திரத்தை முப்பது முறை சொல்லி மகிழ்ந்தது. 

🐅ஓம்.. நமோ நாராயணா.. ஓம்.. நமோ நாராயணா..

Sunday, July 30, 2023

சூரிய கிரஹனம் - விஜயாபுரி - செவ்வாய்கிழமை

கடந்த 2022ம் வருடம்.. அக்டோபர் 25, செவ்வாய்கிழமை. மாலையில் சூரிய கிரஹனம் தமிழ்நாட்டில் தெரியும் என்று வானிலை மண்டல இயக்குநர் அலுவலகம் டிவியில் சொன்னதை, இணையமான டுவிட்டரில் கண்டது.  கரிவலம்வந்தநல்லூர் செல்லும் சாலையில் அமைந்த நடுவப்பட்டி ஊருக்கு மதியம் 12 மணிபோல டூவீலரில் சென்றது. எனது குளக்கட்டாக்குறிச்சி ஊரிலிருந்து வடக்கு திசையில் நான்கு கிலோ மீட்டர்.  நண்பரை பார்த்து சந்தித்து பேசிவிட்டு எங்கு செல்லலாம் என எண்ணியபோது.. பள்ளி வகுப்பு நண்பனை காண விஜயாபுரி செல்லலாம் என கிளம்பியது. கோவில்பட்டி நகரிலிருந்து எட்டையாபுரம் செல்லும் சாலையில் பயணித்து தெற்கு திட்டங்குளம் ஊரினை கடந்து வலது புறமாக திரும்பி ஐந்து கிலோ மீட்டர் பயணம் செய்தால் விஜயாபுரி ஊரினை அடையலாம். இப்படியாக, பயணம் செய்து வந்தது. 

மாலை வேளை.. சூரிய கிரஹணம் நடைபெறும் என்பதால் ஸ்ரீவெங்கடாசல பெருமாள் கோவிலின் நடை சாத்தப்பட்டு பூட்டியிருந்தது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்களின் நடை பூட்டியிருப்பதை டுவிட்டர் செய்தியில் கண்டது. மாலை 05:30 மணி. ஊருக்குள் நுழையும்போது குருமலை அடிவாரத்தின் கீழே சூரிய கிரஹணம் தெளிவாக தெரிந்ததை கண்டு பிரமிக்கச் செய்தது. 

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலின் பின்புறம் சாலையில் அமைந்த விஜயாபுரி காம்ப்ளக்ஸில் அமைந்த செண்பகா நூலகத்தில் மார்ச் 04 அன்று எழுத்துச் சித்தர் பாலகுமாரன் எழுதிய "கர்ணனின் கதை" நாவலின் மூன்றாம் பதிப்பு நூலினை ரூபாய் 65க்கு வாங்கியதை.. மனதில் நினைவாக சுழன்றபோது, பாலகுமாரன் அவர்களை எழுத்துச் சித்தர் என கோடான கோடி வாசகர்கள் அழைக்கிறார்கள் என்பதை எண்ணி பிரமிப்பூட்டியது. 

2022, மார்ச் 4 - வெள்ளிக்கிழமை.. திதி பிரகாரம் ஸ்ரீராமகிருஷ்ணர் அவர்களின் பிறந்த தினம்.. சுவாமி விவேகானந்தர் அவர்களை உலகிற்கு அடையாளம் காட்டிய குரு எனச் சொல்வார்கள்.

மூன்றாம் பாதிப்பு - 2011, பிப்ரவரி.. விடுதலை வீரன் வாஞ்சிநாதனின் நூற்றாண்டு நினைவு ஆண்டில் வெளியான மூன்றாம் பாதிப்பு நாவல் என்பதை மார்ச் 4 அன்று செண்பகா நூலகத்தில் வாங்கும்போது நண்பரிடம் சொன்னேன். 2017ம் ஆண்டு கர்ணனின் கதை நூலினை கண்டேன். பின்பு ஒரு வாரம் கழித்து நூலை வாங்கலாம் என வந்தபோது வாசகர் ஒருவர் இரவலாக எடுத்துச் சென்றதை அறிய.. இன்று இந்த நூலை கண்டு மிகவும் பாக்கியமாக அமைந்ததை சொன்னேன். 


விஜயாபுரி ஊருக்குள் சென்று நண்பனை காண வீட்டிற்குச் சென்றபோது திருநெல்வேலி நகருக்கு சென்றிருப்பதாக அவனுடைய அம்மா சொன்னார். இப்படியாக.. அக்டோபர் 25, செவ்வாய்கிழமை மனதிற்கு மகிழ்ச்சி தரும் தினமாக அமைந்தது. 

Monday, July 24, 2023

கோவை புத்தக கண்காட்சி - ஜூலை 21

கோவை நகரின் இஸ்கான் கோவில் அருகிலுள்ள கொடிசியா அரங்கில் ஏழாவது ஆண்டு புத்தக கண்காட்சி ஜூலை 21 வெள்ளி அன்று தொடங்கியது. இதற்கு முன்பு 2015ம் ஆண்டு கொடிசியா அரங்கில் முதலாவது புத்தக கண்காட்சி தொடங்கி நடந்தபோது விகடன் பிரசுரத்தின் வெளியீடான பொன்னியின் செல்வன் நாவலின் ஐந்து பாகங்களை வாங்கி மகிழ்ந்த நாட்களின் நினைவுகள், இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு சென்றபோது ஞாபகமாக மனதில் வந்து சென்றது. 


ஜூலை 21, வெள்ளி காலை வேளை புத்தக கண்காட்சி சென்று எந்த புத்தகங்கள் மனதிற்கு பிடிக்கிறது என பார்த்தது. மறுதினம் பிடித்த புத்தகங்களை வாங்கி மகிழ்ந்தது. உடன் பிறந்த தம்பி என்று சொல்லும் அளவுக்கு பாசமான ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படம் ரிலீசான தினமாக(ஜூலை 22) இருந்ததை கண்டு மகிழ்ச்சி ஆனது. 

**திரெளபதியின் கதை - தமிழ் மொழிபெயர்ப்பு ரா.பாலச்சந்திரன் 
   சாகித்ய அகாடமி வெளியீடு.

**குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறு (மூன்று பாகம்) -                     சுவாமி சாரதானந்தர்.. ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் வெளியீடு, கோவை. 

**மகான் அரவிந்தர் வாழ்க்கை வரலாறு - ச.மகாலிங்கம் 
   அலிப்பூர் சிறை வாசம் - அரவிந்தர்.. 
   இரண்டு நூல்களும் பாண்டிச்சேரி அரவிந்தர் ஆஸிரமம் வெளியீடு 

**என் சரித்திரம் - ஊ.வே.சாமிநாதையர், நற்றிணை பதிப்பகம் 

**யான் பெற்ற பயிற்சிகள் - மார்க்சிம் கார்க்கி, வ.உ.சி நூலகம் 

மேற்கண்ட புத்தகங்களை வாங்கி மகிழ்ச்சி ஆனது. ஹரே கிருஷ்ணா சாலையில் நடந்து இஸ்கான் கோவிலருகே வந்தபோது, ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா ஓவியத்தில் தாய் யசோதையுடன் குழந்தை கிருஷ்ணனை காண.. செப்டம்பர் 6ம் தேதி.. கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் - முதல் பாகம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்த தினமாக இருந்ததை கண்டு பிரமிப்பூட்டியது. ஹரே ராமா.. ஹரே கிருஷ்ணா மந்திரம் சொல்லி கிருஷ்ணனை தரிசனம் செய்து மகிழ்ந்தது. 

Tuesday, January 17, 2023

குற்றாலம் ஐந்தருவி..

குற்றாலம் ஊரில் ஐந்தருவி அருகிலுள்ள வன உயிரியியல் பூங்காவிற்கு அன்புச் சகோதரி ராஜேஸ்வரி தனது பிறந்த தினமன்று விஜயமாகி எடுத்த புகைப்படத்தை எனது இ-மெயிலுக்கு அனுப்பினார். தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை ஊரிலுள்ள வேறு வேறு பள்ளியில் நாங்கள் இருவரும் படிக்கையில் பிறந்த வருடம் 1983ம் ஆண்டு என்பதை சொல்லியுள்ளார். குளக்கட்டாக்குறிச்சி ஊரைப் பற்றிய வலைப்பூ உருவாக்கியபோது நிறைய புகைப்படங்களை இ-மெயிலுக்கு அனுப்பி உதவினார். 

ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய டெர்மினேட்டர் படத்தில்.. நள்ளிரவில் வானத்தில் வெட்டிய ஒரு மின்னலில் கைல்ரீஸ் பிறந்து இன்றைக்கு என்ன தேதி, வருடம், கிழமை என்ன என்பதை ஒருவரிடம் கேட்கையில் மே 12, வியாழக்கிழமை என்பதை மட்டுமே பேசுகையில்.. எந்த ஆண்டு என்பதை கேட்பதற்குள் துப்பாக்கியுடன் ஓட்டம் பிடிப்பார். இந்தக் காட்சியை படத்தில் பார்க்கையில் மெய் சிலிர்க்க வைக்கும். தங்கை ராஜேஸ்வரியின் புகைப்படத்தை பார்த்த பின்பு.. ராஜேஸ்வரி பிறந்த 1983ம் ஆண்டின் தினத்திலே டெர்மினேட்டர் படத்தில் கைல்ரீஸ் பிறப்பதைக் கண்டு பிரமிப்பூட்டியது. 

உலகை அழிக்கப் பிறந்த ஒரு பயங்கரமான எந்திரம் பிறந்த பிறகு இந்த எந்திரமிடமிருந்து உலகை காப்பாற்ற ஒரு மகனை பெற்றெடுக்க கைல்ரீஸ் பிறப்பார். இதுவே டெர்மினேட்டர் படத்தின் மிகச் சிறந்த தொடக்கமாகும். 

ஓம் நமசிவாய..