Saturday, July 27, 2013

தற்போதைய தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் நடிகர் திலகம் சிவாஜிகணேசனை 1967 ம் ஆண்டு பொம்மை ஏடுக்காக நேர்காணல் செய்த வேளையில்

ஜெயலலிதா:சின்ன வயசிலே நீங்க நாடக மேடையில் நடிக்க ஆரம்பிச்சீங்க-இல்லையா?அப்போ ஏதாவது நினைச்சதுண்டா.அதாவது எதிர்காலத்தை பற்றி.இப்படி ஒரு நடிகரா வருவோம்னு நினைச்சதுண்டா?

சிவாஜி:இப்படி ஒரு நடிகனாகிவிடுவேன்னு கனவுகூட கண்டதில்லை.நடிக்க வேண்டும்கிற  ஒரே ஆர்வம் தான் என்னை மேடைக்கு துரத்திச்சு தவிர,வருங்காலத்தைப் பற்றியோ,எதிர்காலத்தைப் பற்றியோ நினைக்க முடியாத நிலை.அப்போது அடுத்தவேளை சோத்துக்கே என்ன செய்யறது?எங்கே போறது என்ற நிலையில் எதிர்காலத்தைப் பற்றி நான் நினைக்கலே.அதுக்கு நேரமே கிடைக்கலேன்னு சொல்வேன்.

ஜெயலலிதா:நடிகர்கள் அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளவேணும்னு நீங்க நினைக்கிறீங்களா?அப்படி நடந்தால் தங்களது தொழிலுக்கும் அரசியலுக்கும் சமமான வகையில் பணியாற்ற முடியும்னு நினைக்கிறீங்களா?

சிவாஜி:அரசியல் வேறு,நடிப்பு வேறு.நடிகனாக இருப்பவன் நடிப்புக்குத்தான் முதலிடம் தரவேணும். நான் ஒரு அரசியல் கட்சியில் இருப்பதால் நான்
முழுக்க முழுக்க அரசியலிலேயே இருக்க வேண்டும்னு அந்த கட்சியும் விரும்பாது. ஆனால் கட்சியில் இருப்பதாலே சில கடமைகள் அவனுக்கு உண்டு.சில கடமைகளை அவனிடமிருந்து எதிர்பார்க்கவும் கட்சிக்கு உரிமை உண்டு.உதரணமா எனக்கு இரண்டுமாசம் ஓய்வு கிடைக்குதுன்னு வச்சுக்குவோம்.ஒரு மாசம் நான் ஓய்வு எடுத்துக்கலாம்.ஒரு மாசம் கட்சிக்காக உழைக்கலாம். ஆனா கட்சி வற்புறுத்தாது.எப்பவும் வரலாம், போகலாம். அதனால கட்சி,நடிப்பு இரண்டுக்கும் முடிச்சுப் போடக்கூடாது.அது வேறு,
இது வேறு.

ஜெயலலிதா:தமிழ் படங்கள் இப்போ முன்னேறியிருப்பதா நினைக்கிறீங்களா?அல்லது தரம் குறைந்து விட்டதாக எண்ணுகிறீர்களா?

சிவாஜி:எல்லாத் துறையிலும் நிச்சயமாக முன்னேற்றம் அடைஞ்சிருக்கு.
அதேசமயம் சில படங்கள் மக்களது ரசனையை குறைச்சிடும் போலிருக்கு.
இந்த மாதிரிப் படங்கள் நூற்றுக்கு இருபத்தஞ்சு இருக்கும்.ஆக நாம் மேலே
ஏறினாள்,இந்தப் படங்கள் கொஞ்சம் நம்மை கிழே இழுத்து விட்டுடுது.

ஜெயலலிதா:மிகுந்த திறமைசாலிகளுக்கும் சிலசமயம் அவங்க மேற்கொண்டு இருக்கும் தொழிலிலேயே சவாலாக சில விசயங்கள் முளைச்சிடும். அதுபோல சிறந்த நடிகரான உங்களுக்கே,சவாலா இருந்த வேஷம் எது?

சிவாஜி:நல்ல கேள்வி.கப்பலோட்டிய தமிழனாக நடிச்சேனே,அதுதான் உண்மையிலேயே எனக்கு சவாலாக இருந்த வேடம்.ஏன்னா கப்பலோட்டிய
அந்த பெருமகனாரை நேரில் பார்த்த பலர் இன்னைக்கும் நம்மோடயே இருந்துக்கிட்டிருக் காங்க. கதைக்குள்ள வரும் பாத்திரங்களை ஏற்று நடிப்பது சுலபமான காரியம்.ஆனால் நமது வாழ்க்கையில் சந்தித்த,அதுவும் சமீப காலம் வரைக்கும் இருந்த ஒரு பெரிய மனிதரைப் போல நடிக்கிறோம் என்று சொல்றபோது,அந்த நடிப்பை எல்லோரும் ஏத்துக்கணும். அதிலே மாறுபாடு எழக்கூடாது.பெரியார் அவங்களைப் போல நடிக்கிறோம் என்றால்,பாக்கிறவங்க 'பெரியாரைப் பார்ப்பதுபோலவே இருந்ததுன்னு சொல்லணும்.அப்போதான் நடிப்பு பூரணத்துவம் பெரும்.அந்த மாதிரியான ஒண்ணுதான் இந்தக் கப்பலோட்டிய தமிழன் வேஷம்.இதில் நான் நடிச்சதை பார்த்துட்டு,அந்தப் பெரியவர் வ.உ.சி.யின் மகன் 'என் அப்பாவை நேரில் பார்த்ததுபோல இருந்தது' என்று சொன்னார்.ஒரு வெற்றியாகத்தான் நான் இதைக் கருதுகிறேன்.

ஜெயலலிதா:நீங்க நாடகங்களிலே நடித்து வந்த காலத்தில் சினிமாவுக்கு அடிக்கடி போவதுண்டா?

சிவாஜி:அப்ப மட்டும் என்ன?இப்பவும்ந்தான். மெட்ராஸ் சிட்டியிலே நான் பார்க்காத படமே ஓடாது. நேத்து ராத்திரிகூட ஒரு குப்பை படத்துக்கு நான் போயிட்டு வந்தேன்.

ஜெயலலிதா:அந்த மாதிரியான நாளிலே நீங்க ரொம்ப விரும்பி பலமுறை பார்த்த படம் எது?

சிவாஜி:ருடால்ப் வாலண்டினோ நடித்த 'தி ஷீக்' என்ற படம்.

வலைப்பூ:www.sevaliye-sivaji.blogspot.com

No comments:

Post a Comment